Election 2024
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
உத்தர பிரதேசத்தின் கைஸர்கஞ்ச் (Kaiserganj) தொகுதியின் பாஜக எம்.பியாக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டு (2023) இவர் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டுக்காக ஒலிம்பிக் வரை சென்று உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்து பல பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு எதிராக, பாஜக எம்.பி இவ்வாறு செயல்பட்டது அனைவர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், போராட்ட களத்தில் வீராங்கனைகள் இறங்கினர்.
இதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர். அப்போதும் தீர்வு இல்லை என்பதால் கடந்த ஆண்டு (2023) மே மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது பா.ஜ.க அரசு. ஆனால் வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தினர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த அரசை கண்டித்து அரசு தனக்கு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதை, பிரதமர் இல்லத்தின் முன் வைத்து சென்றார். இவரை தொடர்ந்து வினேஷ் போகத், தனது அர்ஜுனா விருதை திரும்ப கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்ந்து சூடு பிடித்து வந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீது பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்த சூழலில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ் பூஷனுக்கு சீட் வழங்க முடியாத நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக. கைஸர்கஞ்ச் (Kaiserganj) தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு பிரிஜ் பூஷன் சிங் வெற்றி பெற்று எம்.பியாக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் மீதுள்ள பாலியல் புகார் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் கண்டனங்களையும் கருத்துகளையும் பெற்றது. ஏற்கனவே பாஜகவின் மானம் உலக நாடுகள் மத்தியில் பறக்கும் நிலையில், இவருக்கு சீட் வழங்கினால் இதுவும் சர்வதேச செய்தியாக மாறி பாஜகவுக்கு கெட்ட பெயர் உண்டாகும் என்பதால், பிரிஜ் பூஷனுக்கு பதில், அவரது மகன் கரண் பூஷன் சிங்கிற்கு சீட் வழங்கியுள்ளது பாஜக.
பிரிஜ் பூஷன் சிங்கின் மகன், கரண் பூஷன் சிங் கைஸர்கஞ்ச் (Kaiserganj) தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக கூட்டணி கட்சி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவமும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், கரண் பூஷன் சிங்கிற்கு சீட் கொடுத்தது தவறில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியதாவது, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை. எனவே அவர் மகனுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியதில் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட பலரும் போராட்டம் நடத்தியும் ஒரு ஒன்றிய அமைச்சர் இதுபோல் தெரிவித்திருப்பது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!