Election 2024

Fact Check : கனிமொழி குறித்து போலி செய்தி பரப்பி வரும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்கும் நிலையில், பாஜக மற்றும் பாஜக ஆதரவு கட்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போலி செய்தி பரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது அதிமுக பிரமுகர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து போலி செய்தி பரப்பி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தூத்துக்குடியில் விரட்டப்பட்ட திமுக வேட்பாளர் கனிமொழி" என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வெளியிட்டுள்ளது போலியான தகவல்.

உண்மை என்னவெனில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு, அவர் நிற்கும் தொகுதியான தூத்துக்குடியில் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். தூத்துக்குடி எம்.பியான கனிமொழி, தற்போது அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனைத்தொடர்ந்து அங்கே தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், கனிமொழியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்கே பிரசாரம் மேற்கொண்ட கனிமொழிக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் தூத்துக்குடி தனது 2-ம் தாய் வீடு என்று நெகிழ்ச்சி தெரிவித்தார் கனிமொழி. வெள்ளம் நிகழ்விலும் இரவு, பகல் பாராமல் களத்தில் இருந்து பணியாற்றினார் கனிமொழி. இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி கனிமொழி தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் அங்கிருந்த நபர் ஒருவர், "நீங்க பேசுனா போதும் அக்கா..." என்று கூற, மற்ற சிலரோ, "நீங்க சில வார்த்தைகள் பேசிட்டு போங்க அக்கா..." என்று அன்போடு, உரிமையோடு கேட்டுள்ளார். இதையடுத்து, கனிமொழி, தான் இருந்த பகுதியிலேயே நெகிழ்ச்சியாக பேசிவிட்டு சென்றார்.

அப்போது பேசிய கனிமொழி, "இதைவிட அன்பான ஒரு வரவேற்ப நான் பார்க்கவில்லை. வழிமறித்துப் பேசிவிட்டுத் தான் போகவேண்டும் என்று கேட்கக்கூடிய அந்த அன்பு, அதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். மீண்டும் உங்களுடன் பணியாற்றத் தூத்துக்குடி வேட்பாளராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிற்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்து இருக்கிறது” என்றார்.

தூத்துக்குடியில் கனிமொழிக்கு தொடர்ந்து மிகுந்த வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது அதிமுக நிர்வாகி போலி செய்தி பரப்பி வருகிறார். இவரைத்தொடர்ந்து சில பாஜக ஆதரவாளர்களும், பிரமுகர்களும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் போலி செய்தி பரப்பி வரும் நிலையில், இவர்களுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார், பாஜக மாநில ஐ.டி விங் தலைவராக இருந்தார். பாஜகவில் இருந்து போலி செய்தி பரப்பியது போதாது என்று, தற்போது அதிமுகவில் இணைந்து போலி செய்தி பரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தோலுரிக்கப்பட்ட பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !