DMK

”இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? உங்கள் வேட்பாளரை பாருங்கள்” : அப்பாவு கடும் விமர்சனம்!

திருச்சியில் நேற்று (ஜூன் 01) நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மூலம் ஜாதி, மத அரசியலை நாங்கள் தான் ஒழித்துள்ளோம் என பேசினார். மேலும், தமிழ்நாட்டில் முக்கியப் பிரச்சனைகள் நடந்துவரும் சூழலில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமைகள்;

குழந்தைகள் மீதான வன்கொடுமை, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசிய ஆளுநர் மாளிகை, தமிழ்த்தாய்க்கு மூன்றாம் இடம், கர்நாடகா மேகதாது பிரச்சனை என தொடர் பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இதுகுறித்து வாய் திறக்காமல், திமுக தான் ஆளும் கட்சி என நினைத்து அவருக்கு அவரே சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு அவர்கள் தனது சமூக வலைதளப்பதிவில், ”ஜாதி, மத, ஊழலை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வரே மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர்கள் யார்? இதில் ஜாதி, மதம் இல்லையா? திருச்சி கிழக்கு வேட்பாளராக தாங்கள் போட்டியிட்டீர்கள். இதில் மதம் இல்லையா?

தமிழ்நாடு முழுவதும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை பார்த்தாலே தெரியும். இதில் ஜாதி, மதம் துளிர்விட்டு செழித்து வளர்ந்திருப்பது தெரிகிறது.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆறே நாளில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை புஷ்பா பட பாணியில் சோபா செட் மூலம் தன்வசப்படுத்தி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சியை உடைத்து 25 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்த தங்கள் செயல் ஜனநாயக படுகொலை இல்லையா ?

இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? இது தூய எண்ணம் கொண்ட முதல்வர் செய்யும் செயலா?” என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.