DMK
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
திராவிடம், பெரியாரியம், அண்ணா, கலைஞர் என திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட Gen Z இளம் தலைமுறையின் சந்திப்பு ’GenZ DMK’ என்னும் பெயரில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 1,500-க்கும் மேற்பட்ட Gen Z இளைஞர் பட்டாளம் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர்.
மிகவும் சிறிய அளவில் இணைய கருத்தரங்காக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சி, இளைஞர்களின் வரவேற்பால் ஒரு மண்டபத்தில் நடைபெற வேண்டிய நிகழ்வாக மாறி அதுவும் கடைசி நேரத்தில் தடைபட்டு, மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக மாறும் அளவிற்கு நடைபெற்றதற்கு முக்கியக் காரணமே ஆளும் பாசிச தவெக அரசுதான்.
காவல்துறையின் கெடுபிடிகளாலும் பல்வேறு இடையூறுகளிலும் இளைஞர்கள் சிக்கித் தவித்த போது, கழகம் கைகொடுத்து அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மிகப்பெரிய நிகழ்வாக ’GenZ DMK’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ சமூக வலைதளங்களில் வதந்திக்கு பதில் அளிக்கும் திமுக ஆதரவாளர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தொழில்நுட்ப சார்பில் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
வீடுகளில் திமுக - ராஜேஸ்வரி, சமூக வலைதளங்களில் களமாடுவோம் - யாசர் அரபாத், AI யுகத்தில் இன்றைய அரசியல் - சையது முஷாரப், மீண்டு வருவோம், மீண்டும் வருவோம் - அன்பானந்தம் அறியப்பன், உடன்பிறப்புகளே உங்களைத்தான் - ஹேமந்த், கொள்கையா மாயையா - வெற்றிச்செல்வன் ஆகிய தலைப்புகளில் Gen Z இளைஞர்கள் சிறப்புரையாற்றினர்.
அப்போது இளைஞர்கள் மத்தியில் பேசிய சட்டத்துறை செயலாளர்
என்.ஆர்.இளங்கோ அவர்கள், என் தந்தையின் இறப்பு பின், என் குடும்பம் வறுமைக்கு சென்றது, அதை எல்லாம் தாண்டி நான் இந்த நிலையில் உள்ளேன் என்றால் திமுக தான்.தற்போதைய தலைமுறை பேசும் சொற்களுக்கு அர்த்தம் தெரிய தனி அகராதி வேண்டும் போல, விரைவில் அவற்றையும் நாங்கள் கற்றுக்கொள்வோம்,
சமூக வலைத்தளத்தில் சிக்கிய மயக்கமான சூழ்நிலையில் ஒரு மாற்றம் அரசியலில் உருவாகியுள்ளது, நட்சத்திரத்திற்கும் மத்தாப்பிற்கும் வித்தியாசம் உள்ளது நட்சத்திரம் எப்பொழுதும் இருக்கும் மத்தாப்பு சிறிது நேரத்திலே அணைந்து விடும். இது மத்தாப்புதான்,
முன்பு பேசியவர் 2026 27 ல் உள்ளாட்சி தேர்தல் வரும் என கூறினார், சொல்ல முடியாது சட்டமன்றத் தேர்தலும் கூட வரலாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அரசியல் சட்டத்தின் பால் நடக்கக்கூடிய காட்சிகள் அப்படித்தான் உள்ளது, நிலையான ஆட்சி அவர்களிடம் இல்லை. மெஜாரிட்டி இல்லை என்றாலும் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என கலைஞர் ஆட்சி செய்து காட்டியுள்ளார், இவர்கள் அதைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டால் நல்லது, ஆனால் இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள்.
இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று சேர்ந்து இருப்பது, கட்சி சார்ந்து அல்லாமல், மாநிலத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது, மாநிலத்திற்கு எது நல்லது, மாநிலத்தில் எந்த கொள்கை உடைய ஆட்சி அமைய வேண்டும் என்ற உணர்வுகளை தாங்கி பிடித்து வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த கூட்டம் இங்கு நடந்திருப்பதற்கு தமிழ்நாடு காவல்துறைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும், ஒரு படி மேலே சென்று காவல்துறையின் அமைச்சராக உள்ள முதலமைச்சருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இந்த நிகழ்ச்சியை அமைதியான முறையில் வேறு எங்காவது நடத்தி இருந்தால் 50 பேர் தான் கூடியிருப்பார்கள் ஆனால் இப்பொழுது 500க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.
வாடகைக்கு பிடித்திருந்த தனியார் மண்டப உரிமையாளர்களை மிரட்டி, Gen Z அமைப்பு நிகழ்ச்சி நடத்த விடாமல் காவல்துறை செயல் உள்ளது, அண்ணா வழியில் கலைஞர் பாதையில் நடப்போம் என நீங்கள் முடிவு செய்தீர்கள், அதனால் தான் காவல் துறையால் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது,
Gen Z தலைமுறையை குற்றம் சொல்லக்கூடாது அதற்கு முந்தைய தலைமுறையான அவர்களின் பெற்றோர்கள் தான் காரணம், திராவிடத்தால் படித்து, பணிகளைப் பெற்று நல்ல இடத்திற்கு சென்றவர்கள், நடிகர் நடிகைகளை குழந்தைகளுடன் பார்த்தவர்கள், அரசியல் செய்தி வந்தால் உனக்கு எதற்கு அரசியல் உள்ளே சென்று படி என்று சொன்னதுதான் அவர்களின் தவறு. இந்தத் தலைமுறையை அரசியல் படுத்த தவறியது நமது தவறு, இந்த தடுமாற்றத்திற்கு காரணம் இளைஞர்கள் அல்ல அவர்களை அரசியலப்படுத்த தவறிய அதற்கு முந்தைய தலைமுறையால் தான்.
சட்டத்துறை இங்கு இருப்பதற்கான காரணம் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை சொல்வதற்காக தான், வருங்காலம் உங்கள் கையில் வருங்காலத்தில் தலைமை ஏற்கப் போவது நீங்கள், சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் அதற்கான வழிகாட்டியாக மட்டுமே நாங்கள் இருப்போம்.
வலைதளத்தில் நடக்கக்கூடிய குற்றங்களுக்கு உடனடியாக புகார் அளித்து தீர்வு காணப்படும், ஆனால் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. கண்ணியத்துடன் களம் ஆடவேண்டும். அவர்கள் பாணியில் எதிர்கொள்ளுங்கள் ஆனால் அவர்கள் மொழியை பயன்படுத்தாதீர்கள், அவர்களின் மொழி என்பது அருவருக்கத்தக்கது, அதை நாமோ நம் குழந்தைகளோ கற்றுக் கொள்ளக் கூடாது.
உங்களின் பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் யார் தலையிட்டாலும் திமுகவின் சட்டத்துறை உங்களுடன் துணை நிற்கும். தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர் அணியில் 11 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் இதற்காக ஒரு தனிக்குழு அமைக்கப்பட உள்ளது, அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும், தமிழ்நாட்டில் உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நீங்கள் அவர்களை அணுகலாம், முதல் நாளாக வந்து நிற்பது திமுக வழக்கறிஞர் தான் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும், ஒரு நபரின் அடையாளத்தை பயன்படுத்தி வேறு ஒரு நபர் பொய் பிரச்சாரம் செய்தால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கக்கூடும், இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களை கண்டறிந்து அவர்களின் தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்குங்கள், அதற்கான தீர்வை நாங்கள் பெற்றுத் தருகிறோம்.
இளம் தலைமுறை வழி தவறி சினிமா மோகத்தில் சென்று விடுவார்கள் என்ற கவலை இருந்தது, அதை அனைத்தையும் நீக்கி நாங்கள் இருக்கிறோம் என்று நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.
தொடர்ந்து பேசிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, இது ஒரு மனதிற்கு மிக நெருக்கமான சமயம், திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, இதை ஒரு முறை அல்ல, பல லட்சம் முறை சொல்வதற்கு நீங்கள் உள்ளீர்கள். இந்த நேரத்தில் இதைக் காண தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இங்கு இல்லை என்ற வருத்தம் மட்டும்தான். அனைத்தையும் தாண்டி கலைஞர் இல்லை என்பது தான். 83 வயதில் அனைத்து சமூக வலைதளங்களையும் பயன்படுத்தினார்.
இந்த கூட்டத்திற்கு முதலில் 10 பேர் சந்திப்பு என்று இருந்தது, திமுகவை பார்த்தால் இவர்கள் எல்லாருக்கும் ஒரு பயம் தான், மிசைவை பார்த்த திமுக இது என்பது ஒரு சிலருக்கு இன்னும் தெரியவில்லை, சாதாரண விட்டு இருந்தால் 50 பேர் தான் கூடி இருப்பார்கள், ஆனால் இப்போது இது காவல்துறையால் இவ்வளவு பெரிய கூட்டமாக மாறியுள்ளது.
தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக வளர்ந்து உள்ளது என்றால் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், தலைவரும் தான், 10 ஆண்டு கால இருளுக்கு விடியல் கொடுத்த ஆட்சி திமுக. ரொம்ப சுலபமாக சில விஷயம் கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது என்பார்கள் அதுபோல சிலருக்கு தமிழ்நாட்டின் மதிப்பு தெரியவில்லை. அதனால் ஒரு சில விஷயம் நடந்து விட்டது.
அடிக்க அடிக்க மேலும் வளர்ச்சி பெறும் இயக்கம் திமுக, இன்று மட்டும் சிலரின் துரோக செயல் அல்ல, 75 ஆண்டுகளாக இந்த மண்ணை போட்டு மிதித்தவர்களை எதிர்த்து களம் கண்ட இயக்கம் இது, 75 ஆண்டு காலம் திமுக இருக்க காரணம் கொள்கை பிடிப்பு தான். தமிழ்நாட்டில் கொள்கை பிடிப்பு இருக்கும் வரை யாரும் சீண்டிப் பார்க்க முடியாது.
இந்த சூழலிலும் திமுக கொடியை உயரப் பிடித்துக் கொண்டு செல்பவர் தான் உண்மையான திமுக காரர். அந்த காலத்தில் காங்கிரசின் அடக்கு முறை, மீசாவின் கொடுங்கோள் காலம் தாண்டி, 13 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்த பொழுதும் மீண்டும் ஆட்சி பெற்று இரண்டு ஆண்டுகளில் பொய் பிரச்சாரதால் ஆட்சியை இழந்த திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. இன்று மட்டுமல்ல பொய் செய்தி, பொய் பிரச்சாரம், அன்றும் 1991லிலும் எதிர்கொண்டது.
1996லும், 2006லும், 2021லும் ஆட்சி பெற்று துவண்டு கிடந்த தமிழ்நாட்டை மீண்டு எழ வைத்தது திமுக தான், தன் எழுச்சியாக யார் உதவியும் இல்லாமல் வாழை வாழையடி வாழையாக உருவான கொள்கை கூட்டம் இருக்கும் பொழுது, இதற்கு தான் சாதாரணமா வரல திமுக காரன் என்று சொல்லுவது. இதற்குப் பின்னால் 75 ஆண்டு கால வரலாறு உள்ளது.
தோல்வியை கண்டு துவண்டு போகாமல், என்னதான் மக்கள் இவ்வாறு செய்துவிட்டார்கள் என்று மக்கள் மீது வெறுப்பை காட்டாமல் இன்னும் மக்களுக்கு அதிகமாக செய்யக்கூடிய இயக்கம்தான் திமுக. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நாம் தலைவர் அவர்கள், முடிவு வந்த அடுத்த நாளை கொளத்தூர் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இப்படி ஒரு தலைவரை இந்த நாடு எந்த காலத்தில் யாவது பார்த்து உள்ளதா, கொள்கை பிடிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சி மீதான அசைக்க முடியாத நம்பிக்கைதான்.
இவற்றையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டிற்கு திமுக காரன் தவிர வேறு வழி இல்லை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்பதை நான் உறுதியாக கூறுவேன், திமுக காரன் என்றால் ஒரு திமிர் இருக்கத்தான் செய்யும், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அந்த திமிர் அதிகமாகவே இருக்கும். திமுகவால் மட்டும் தான் குறுகிய காலகட்டத்தில் இத்தகைய வளர்ச்சி தர முடியும் என்பதற்கு அதிகமான சான்றுகள் உள்ளன என தெரிவித்தார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி