DMK
குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட CAA-வுக்கு எதிரான 2 கோடி கையழுத்து படிவங்கள்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க கூட்டணி சார்பில் தமிழகத்தில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் குடியரசுத் தலைவரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆர்.சி.க்கு வழிவகுக்கும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் கடந்த 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தக் கையெழுத்து இயக்க படிவங்களில் தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 பேர் கையெழுத்திட்டனர். சிஏஏ-வுக்கு எதிரான கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஞாயிறன்று நடந்தது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து கையெழுத்துப் படிவங்கள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதை எடுத்துச் சொல்லி, அச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.” எனக் கூறினார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!