DMK

“தூத்துக்குடி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை”- கனிமொழி MP குற்றச்சாட்டு!

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான முத்தையாபுரம், பாரதி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, கே.டி.சி நகர், முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து தேங்கியுள்ளது.

இந்தப் பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., இரண்டாவது நாளாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட கனிமொழி எம்.பி., தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாகத்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல குளறுபடிகள் உள்ளன. இந்த குளறுபடிகளைச் சீர் செய்து விட்டுத்தான் தேர்தலை அறிவித்திருக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் மழை அதிகளவில் பெய்துள்ளது. மழைநீர் மொத்தமுமே கடலுக்குச் செல்லக்கூடிய ஒரு நிலைதான் தற்போது உள்ளது. தண்ணீரை சேமிக்கக்கூடிய குளங்கள் மற்றும் கால்வாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து அரசோ, அமைச்சர்களோ யாரும் இதுவரை அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து குறைகளைத் கேட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.

Also Read: "அ.தி.மு.க அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே தேர்தல் ஆணையத்தை நடத்தலாம்” - மு.க.ஸ்டாலின் தாக்கு!