DMK

வேலூரில் தி.மு.கவின் வெற்றி தாமதப்பட்டிருக்கலாம் ஆனால் தடுக்க முடியாது - உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை

வேலூர் மக்களவைத் தேர்தல், வருகிற ஆகஸ்ட்.,5ம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதனையொட்டி மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் கே.வி குப்பத்தை அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் உதயநிதி ஸ்டாலின் மக்கள் முன்பு தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 38 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது, மோடிக்கும், அவரது அடிமைகளாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மரண அடியை கொடுத்துள்ளது.

தங்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்ததாலேயே வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை சூழ்ச்சி செய்து நிறுத்தினர். வேலூரில் தி.மு.க. வெற்றி பெறுவதை தாமதப்படுத்தியிருந்தாலும், அதனை அவர்களால் தடுக்க முடியாது. 38 எம்.பிக்களுடன் 39-வது எம்.பியாக கதிர் ஆனந்த, மக்களவையில் தன் குரலை பதிவு செய்வது உறுதி” என உதயநிதி தெரிவித்தார்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு வேலூர் மக்கள் திரளாக திரண்டு வந்து பலத்தை வரவேற்பை தந்தனர்.