Cinema

தொடர் பாலியல் புகாரின் எதிரொலி... AMMA சங்க 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை தலைவரான பெண்!

இந்தியாவில் சினிமாத்துறையில் முக்கியமாக விளங்கும் ஒன்றுதான் மலையாள திரையுலகம். மலையாள திரையுலகம் இந்தியா முழுவதும் உற்று நோக்கப்படும் ஒன்றாகும். இந்த சூழலில் பிரபல நடிகை பாவனா பாலியல் வன்கொடுமை பெரிய பூதாகரத்தை ஏற்படுத்திய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் மலையாள திரையுலகத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து அறிக்கை வெளியிட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த ஹேமா கமிட்டி தனது அறிக்கையை கடந்த 2024-ம் ஆண்டு வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கியது. மலையாள திரையுலகில் பல நடிகைகள் பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளது அறிக்கை மூலம் வெளிவந்தது. அதுமட்டுமின்றி மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளராக இருந்த சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் பாலியல் புகாரில் சிக்கினர்.

அப்போதைய AMMA சங்க நிர்வாகிகள்

இதன்காரணமாக AMMA சங்கத்தின் அப்போது தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை AMMA சங்கத்தின் தேர்தல் நடைபெறும் நிலையில், 2024-ம் ஆண்டுதான் தேர்தல் நடைபெற்று மோகன்லால் தலைவராகவும், பாலியல் புகாரில் சிக்கிய சித்திக் பொதுச்செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குக்கு பரமேஸ்வரன் - ஸ்வேதா மேனன்

எனவே அடுத்த தேர்தல் 2027-ம் ஆண்டு நடைபெற வேண்டும். ஆனால் பாலியல் புகார் காரணமாக ஒட்டுமொத்த AMMA சங்கம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் மீண்டும் நடைபெற்றது. அதன்படி AMMA சங்கத்தின் தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உட்பட 6 முக்கிய பதவிகள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவற்றுக்கான தேர்தல் கொச்சியில் நேற்று (ஆக.15) நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் போட்டியிட்டனர். இதில் ஸ்வேதா மேனன் வெற்றிபெற்றார். பொதுச் செயலாளராக, குக்கு பரமேஸ்வரன் ,பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா, ஜெயன்சேர்த்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணைச் செயலாளராக அன்சிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாள நடிகர் சங்க 31 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராவது இதுதான் முதன்முறை. மேலும் குக்கு பரமேஸ்வரன் முதல் பெண் பொதுச்செயலாளர் ஆவார். அதோடு முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பெண்களாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் இதுவே முதன் முறை என்பதால், அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்வேதா மேனன் கடந்த 2021–2024 ஆம் ஆண்டில் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகில் எழுந்த பாலியல் புகார் இந்திய திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது பெண் ஒருவர் முதல் முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read: ”தேசிய திரைப்பட விருதுகளில் மொழி பாகுபாடு காட்டப்படுகிறது”: நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு!