Cinema

”தேசிய திரைப்பட விருதுகளில் மொழி பாகுபாடு காட்டப்படுகிறது”: நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு!

அண்மையில் தேசிய திரைப்படங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதில், உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு துணை நடிகை விருதும், நடிகர் விஜயராகவனுக்கு பூக்காலம் படத்துக்கு துணை நடிகர் விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை ஊர்வசி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜயராகவனுக்கும் தனக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் தேசிய தேர்வுகள் நடைபெறுகிறது என்றும், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப் படுகிறதா? என்றும் இதனை தேர்வு குழுவினர் விளக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம், வரி செலுத்துகிறோம், அரசு தருவதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை சரியல்ல என்றும், அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருதி வாங்கி செல்ல முடியாது, இன்று எனக்கு ஏற்படும் நிலை நாளை மற்றவர்களுக்கு ஏற்படும் என்றும் நடிகை ஊர்வசி குறிப்பிட்டுள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது, இதனை கேரளாவை சேர்ந்த அமைச்சர் சுரேஷ் கோபி விசாரித்து கூற வேண்டும் என்றும் நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

Also Read: "ரசிகர்களின் அன்பை என் சுயலாபத்திற்கு பயன்படுத்த மாட்டேன்" - நடிகர் அஜித் குமார் அறிக்கை !