Cinema

“இதனால்தான் பஹல்காம் போன்ற தாக்குதல் நடக்கிறது..” - பாடகர் சோனு நிகம் கருத்தால் கொந்தளிக்கும் கன்னடர்கள்!

இந்தியாவில் பிரபல பாடகர்களில் முக்கியமானவர் சோனு நிகம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, போஜ்புரி என பல மொழிகளில் பாடல் பாடியுள்ளார். குறிப்பாக கன்னடத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். இதனால் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவ்வப்போது Concert இசை நிகழ்ச்சியை நடத்துவார்.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 25-26 தேதிகளில் பெங்களூருவில் இவரது Concert நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இவர் இந்தியில் பல பாடல்களை பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த சில ரசிகர்கள் கன்னடத்தில் பாடுமாறு கத்தியுள்ளனர். மேலும் 'கன்னடா, கன்னடா' என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் பொறுமை இழந்த பாடகர் சோனு நிகம், பாடுவதை நிறுத்திவிட்டு சில வார்த்தைகளை ரசிகர்களிடம் கூறினார்.

அப்போது சோனு நிகம் கூறியதாவது, “என்னுடைய வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால், நான் பாடிய சிறந்த பாடல்கள் கன்னட மொழியில்தான். நான் கர்நாடகாவிற்கு வரும்போதெல்லாம், மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் வருகிறேன். நாங்கள் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கர்நாடகாவில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்தும்போதெல்லாம், உங்கள் மீது மிகுந்த மரியாதையுடன் வருகிறோம்.

நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தைப் போலவே நடத்துகிறீர்கள். நீங்கள் கேட்கும் போதெல்லாம் நான் கன்னடப் பாடல்களைப் பாடுவேன். ஆனால், என்னுடைய கரியர் அளவுக்கு வயது இல்லாத ஒரு பையன் கன்னடத்தில் பாடச் சொல்லி என்னை மிரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவன் பிறப்பதற்கு முன்பே நான் இந்த துறைக்குள் நுழைந்துவிட்டேன்.

பஹல்காமில் நடந்த சம்பவத்துக்கு கூட இதுபோன்ற அணுகுமுறைதான் காரணம். தயவுசெய்து உங்கள் முன் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பல நிகழ்ச்சிகளை நான் நடத்துகிறேன். மேலும் ஒரு நபர் 'கன்னடம்' என்று கத்துவதை நான் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்காக கன்னடத்தில் குறைந்தது ஒரு வரியையாவது பாடுவேன். எனவே தயவுசெய்து கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.” என்றார்.

பாடகர் சோனு நிகமின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பாடல் கேட்டதற்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் என்ன தொடர்பு? என்றும், இதனையும், அதனையும் ஒப்பிடுவதா? என்றும் கன்னடர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கருத்துக்கு திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா மற்றும் கன்னட ஆர்வலர் எஸ்.ஆர்.கோவிந்து உட்பட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். குறிப்பாக, நிகமின் இந்த வார்த்தைகள் கன்னட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கன்னட ஆதரவு அமைப்பான கர்நாடக ரக்ஷண வேதிகே (கேஆர்வி) அமைப்பின் பெங்களூரு மாவட்டத் தலைவர், பெங்களூருவில் உள்ள அவலஹள்ளி காவல் நிலையத்தில் பாடகர் சோனு நிகம் மீது புகார் அளித்துள்ளார்.

மேலும் கன்னடம் பேசும் மக்களுக்கு எதிராக அவர் பேசிய கருத்துகள் கர்நாடகாவில் உள்ள மொழியியல் சமூகங்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட் முறைகேடு : கேள்வி தாள் மாணவர்களுக்கு கிடைத்தது எப்படி ? CBI குற்றப்பத்திரிகை கூறியது என்ன ?