Cinema

“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...” - பிரபல பழம்பெரும் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு - சோகத்தில் திரையுலகினர்!

கேரளாவை சேர்ந்த பளியத்து ஜெயச்சந்திர குட்டன். 1958-ம் ஆண்டு கேரளாவின் மாநில இளைஞர் திருவிழாவில், தனது 14 வயதில் சிறந்த இளம் மிருதங்க கலைஞராக விருது பெற்றார். இதைத்தொடர்ந்து ‘உத்யோகஸ்தா' என்கிற மலையாள படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த மலையாளத்தின் மனதையும் கொள்ளை கொண்டார்.

இவர் மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் பாடத்தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எத்தனையோ ஹிட் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன், இளையராஜா இசையிலும் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். காற்றினிலே வரும் கீதம் படத்தில், 'சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்' பாடல் தான், ஜெயச்சந்திரனுக்கு முதல் தமிழ் பாடல்.

இதைத்தொடர்ந்து 'ராசாத்தி உன்னை, காணாத நெஞ்சு...', 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...', 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...', ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து...’, ‘கொடியிலே மல்லியப்பூ மயக்குதே...', ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...' என ஜெயச்சந்திரன் பல எவர் கிரீன் ஹிட் பாடல்கள் இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இவர் பூவே உனக்காக படத்தில், 'சொல்லாமலே யார் பார்த்தது...' என்ற பாடலை பாடி, மூன்றாம் தலைமுறை மத்தியிலும் விருப்பத்திற்குரியவராய் மாறினார். எம்.எஸ்.வி.,யில் தொடங்கி ஏர்.ஆர்.ரஹ்மானுக்கு 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் வரை பல பாடல்களை தன் வசீகர குரலால் பாடி மக்கள் மனதை பெருமளவு கவர்ந்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இந்த சூழலில் கேரளாவில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் இவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று தனது 80-வது வயதில் காலமானார். பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பொங்கலை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகும் அந்த 8 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் இதோ!