Cinema

வடிவேலு குறித்து Youtube சேனல்களில் பேட்டி... நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் வடிவேலு குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் காமெடி நடிகர்களில் முக்கியமாக அறியபடுபவர் சிங்கமுத்து. இவர் வடிவேலுவுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் நடிகர் வடிவேலு குறித்து யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசியுள்ளார்.

இந்த பேட்டி பெரும் வைரலான நிலையில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அவதூறாக தெரிவித்த வார்த்தை எது ? என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை எனவும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துகளையும் மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு தரப்பில், இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை எனவும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று, வழக்கை டிசம்பர் 11ம் தேதி தள்ளி வைத்த நீதிபதி, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: செய்தித்துறை TO திரையுலகம்... ஐந்தே திரைப்படங்கள்... தமிழ் இயக்குநர் குடிசை ஜெயபாரதி மறைவு!