Cinema
பாய்ந்த போக்ஸோ வழக்கு... கைதான ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து - வெளியான அறிவிப்பால் சலசலப்பு!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர். நடனக் கலைஞர்களில் பிரபலமான ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா, பல ஹிட் பாடல்களுக்கு நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா..." பாடலுக்கு இவருக்கு சிறந்த நடன இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இவர் மீது, இவருடன் பணிபுரிந்த பெண் ஒருவர் கடந்த மாதம் பாலியல் புகார் அளித்தார். அதாவது சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற பல பகுதிகளில் ஷூட்டிங்கின்போது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தெலங்கானாவில் அமைந்துள்ள நர்சிங்கி என்ற பகுதியில் இருக்கும் எனது வீட்டில் வைத்தும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பெண் நடனக் கலைஞர் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஜானி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், புகார் எழுந்ததை தொடர்ந்து ஜானி மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை அதிரடியாக கைது செய்தனர்.
பாலியல் துன்புறுத்தலின்போது, அந்த பெண் மைனர் என்பதால், ஜானி மாஸ்டர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தேசிய விருது பெறப்போவதை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில், டெல்லியில் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க அவருக்கு அக்டோபர் 6 முதல் 10 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருதை திரும்பப்பெறுவதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி அவருக்கு தேசிய விருது வழங்கப்படப்போவதில்லை என்று தெரிய வருகிறது. இந்த விவகாரம் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியான திரைப்படத்துக்கான தேசிய விருது பட்டியல் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான நிலையில், இந்த விருது வரும் அக்.08-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!