Cinema
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !
மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த மாதம் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் சிலர் திரையுலகில் முக்கிய கமிட்டியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை மட்டுமல்லாமல், இந்திய திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரள அரசின் மூலம் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து தெலுங்கிலும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக அமைக்கப்பட்ட கமிட்டியின் அப்டேட் குறித்து நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். இந்த சூழலில் பிரபல நடன இயக்குநர் ஜானி (Jani Master) மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தில் நடனத்தின் பங்கு முக்கியமாக அமைந்துள்ளது. இந்த நடனத்தை அனைத்து படங்களிலும் நடன கலைஞர்கள் நடிகர் - நடிகைகளுக்கு கற்றுக் கொடுப்பர். இதில் பிரபலமானவர்தான் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா. இவர் பல்வேறு மொழிகளில் நடனம் கற்றுக்கொடுத்து பிரபலமாக அறியப்படுபவர்.
தமிழில் விஜயின் வாரிசு படத்தில் ‘ரஞ்சிதமே...’, பீஸ்ட் படத்தில் ‘அரபி குத்து’, அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா..’, தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் உள்ளிட்ட கோலிவுட், டோலிவுட் என பல படங்களில் பல ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் திருச்சிற்றப்பலம படத்திற்காக ஜானி மாஸ்டர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் இளம்பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் பேரில், இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற பல பகுதிகளில் ஷூட்டிங்கின்போது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தெலங்கானாவில் அமைந்துள்ள நர்சிங்கி என்ற பகுதியில் இருக்கும் எனது வீட்டில் வைத்தும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நடன கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகாரால் ஜானி மாஸ்டர், ஏற்கனவே 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது தெலுங்கு திரையுலகில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர், தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முக்கிய அரசியல்வாதியான பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியில் கடந்த ஜனவரி மாதம் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!