Cinema

த்ரிஷாவுக்கு எதிரான மான நஷ்ட வழக்கு : நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நடந்தது என்ன ?

கடந்த மாதம் நடிகர் மன்சூர் அலிகான் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இவரைத்தொடர்ந்து குஷ்பூ, லோகேஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுத்திய நிலையில், இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததோடு, திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். த்ரிஷாவும் மன்னித்து விட்டதாக தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் நிறைவடைந்தது என்று அனைவரும் எண்ணினர்.

ஆனால் மன்னிப்பு கேட்ட பிறகு கூட, முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு எடுஜோராக ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தன்னை அவதூறாக பேசியதால்தான் கண்டனம் தெரிவித்ததாகவும், ஒரே நேரத்தில் 3 பேர் மீது ஒரே வழக்கு தொடர முடியாது என்றும், மன்சூர் அலிகான் ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதாகவும் த்ரிஷா தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. தொடர்ந்து, 3 பேர் மீது ஒரே நேரத்தில் ஒரே வழக்கு தொடர முடியும் என்றும், தான் பேசியது அவதூறு இல்லை என்றும், தான் பேசிய முழு வீடியோ சமர்பிக்க தயாராக உள்ளதாகவும் மன்சூர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெண்களை பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தால், கண்டனங்கள் வருவது இயல்பு என்றும், உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என்றும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால், இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இதற்காக மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்த நீதிபதி, இது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு விதிக்கப்பட்ட அபராத தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்... 4 நாட்களில் பிக்பாஸ் வெற்றியாளர் அதிரடி கைது - காரணம் என்ன ?