Cinema

“எனக்கு எந்த ஐடியும் இல்லை.. ஏமாற வேண்டாம்..” - இயக்குநர் பாலா பெயரில் போலி Insta.. போலிசில் பரபர புகார்!

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் பாலா. 1999-ல் சேது படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டதை கூட்டியுள்ளார். தற்போது, ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அவர் விலகி, தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத சூழலில், தற்போது இவரது பெயரில் போலி இன்ஸ்டா பக்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து இவர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியன் பழனிசாமி. அந்த பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டா ஐடியில், இவரது பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் தனது குறிப்பில், இது அதிகாரபூர்வமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அதில் விக்கிபீடியாவின் லிங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஐடிக்கு சுமார் 20 ஆயிரம் Followerகள் உருவாகியுள்ளனர். இதனால் அது தனது ஐடி அல்ல என்று இயக்குநர் பாலா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரில், "பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை தனது உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருவதாகவும், அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: விஜய் ஆண்டனி மகள் இறப்பு : விஜயின் ‘LEO’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.. இணையத்தில் குவியும் பாராட்டுகள்!