Cinema

“கலைஞர் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க வேண்டும்.. அப்போதுதான்..” - இயக்குநர் தங்கர் பச்சான் !

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் 'முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர்' என்ற தலைப்பில் பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து உரையாற்றினர். மேலும் இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், "கலைஞரின் புகழ் நாங்கள் பாடி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நான் அடிப்படையில் எம்.ஜி.ஆர் ரசிகன், பிறகு கலைஞரின் பற்றாளராக மாறினேன். சிறந்த நாவலாக 'ஒன்பது ரூபாய் நோட்டு' தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது கலைஞர் அவர்கள் என்னை அழைத்து பேசினார்கள் ஒரு நாவலை முழுமையாக முதல்வராக படிக்கமுடியுமா என எண்ணினேன். அவர் முழுமையாக படித்து என்னிடம் அது குறித்து கேட்டார்.

நான் வாங்கிய விருதுகள் வாங்கியது முதல்வர் கலைஞர் அவர்கள் கையால் தான். அதன் பிறகு என்னுடைய நல்ல படைப்புகளை சிலர் (அதிமுக ஆட்சியில்) கண்டுக்கொள்ளவில்லை. கலைஞர் அவர்கள் எனக்கான விருது கொடுக்கவில்லை எனக்காக செய்வதாக இருந்தால் தனிப்பட்ட முறையில் எதாவது கொடுத்திருக்கலாம். ஆனால் நல்ல படைப்புகளை சிறப்பிக்க எண்ணியவர் கலைஞர்.

'பெரியார்' பட வெற்றி விழாவில் நான் சொல்லவில்லை. என்னை கலைஞர் அவர்கள் அழைத்தார்கள். அனைத்தையும் காது கொடுத்து கேட்பவர் கலைஞர் அவர்கள். மக்கள் குறைகளை சொன்னால் உடனடியாக தீர்க்க எண்ணுபவர். இப்படி ஒரு முதல்வர் உண்டா? மாநில சுயாட்சியை பெற்றுக்கொடுத்தவர் கலைஞர்.

முத்தமிழறிஞர் அவர்களின் வரவிற்கு முன் மேல்தட்டு மக்களின் பதவியாக முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் இருந்தது. அவர் வந்த பின்னால் பாமர மக்களுக்கும் அது கிடைத்தது. அரசு பள்ளியினை தமிழ்நாடு அரசு மீட்டெடுக்கிறது தற்பொழுது. 'பள்ளிக்கூடம்' படத்தினை பள்ளிகளில் காண்பித்தார்கள். என் குடும்பத்தோடு கலைஞர் அவர்கள் இறுதி சடங்கிற்கு சென்றேன். அங்கு அவரை காணமுடியவில்லை.

நான் யாருடைய வாழ்க்கையும் படமாக்க எண்ணவில்லை. எம்.ஜி.ஆர் வாழ்க்கை படமாக எடுப்பது சிக்கல் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய வரலாறு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அலைபேசியிலும் சென்று நிற்கும்." என்றார்.

Also Read: “பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !