Cinema

”எனக்கு ஆடை தரமறுத்தார்கள்”.. இந்தி சினிமாவின் பாகுபாடு குறித்து நடிகை ஹன்சிகா பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஹன்சிகா. இவர், தமிழில் 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, 'மாப்பிள்ளை','வேலாயுதம்', 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தாலும், தெலுங்கு திரையிலும் இவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

மேலும், சிவகார்த்திகேயனுடன் 'மான் கராத்தே', உதயநிதி ஸ்டாலினுடன் 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இதனிடையே சுந்தர் சி-யின் 'அரண்மனை' படத்தின் மூலம் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.

இப்படித் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவருக்குத் தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து நடத்து வருகிறார்.

இந்நிலையில் இந்தி சினிமா உலகில் பாகுபாடு காட்டப்படுகிறது என ஹன்சிகா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய ஹன்சிகா, "தென்னிந்தியப் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தபோது இந்தி சினிமா ஆடை வடிவைப்பாளர்கள் எனக்கு ஆடைகளை வழங்க மறுத்தனர்.

ஆனால் இப்போது என்னை மறுத்தவர்களே அன்பாகப் பேசுகிறார்கள். உங்கள் படங்களில் வெளியீட்டு விழாவிற்கு எங்கள் ஆடைகளை அணியக்கூடாதா என கேட்கிறார்கள். நான் அமைதியாகச் சரி என்று சொல்கிறேன். ஏன் என்றால் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா?" என தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவில் நடிகர்களுக்குள் பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை: சோகத்திலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி -கண்கலங்கிய ரசிகர்கள்