Cinema

நேருக்கு நேர் மோதிய கார் - சரக்கு லாரி.. அதிகாலை நடந்த கோர விபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் !

அண்மைக்காலமாக திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள் உயிரிழந்து வரும் செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட உடல்நலக்குறைவால் நடிகர் மனோபாலா காலமானார். தொடர்ந்து பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கொல்லம் சுதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது தற்போது மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரைப்படங்களில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் தான் கொல்லம் சுதி.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'கந்தாரி' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பிரபலமானார். அதன்பிறகு கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடன் மார்பப்பா, தீட்டா ராப்பை, வாகத்திரிவ் என பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் மட்டுமின்றி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில், தற்போது 39 வயதாகும் கொல்லம் சுதி, கோழிக்கோடு வடகரா பகுதியில் உள்ள தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் அவர் வந்த கார், எதிர்பாராத விதமாக எதிரே சரக்குகளை ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதிகாலை நடந்த இந்த விபத்தில் நடிகர் சுதியுடன் சேர்ந்து வந்த பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோரும் படுகாயமடைந்தனர். மேலும் இதில் நடிகர் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறை, ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி சுதி பரிதாபமாக உயிழந்தார்.

இதையடுத்து இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதிகாலை நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நடிகர் கொல்லம் சுதிக்கு திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கார் டயர் வெடித்து விபத்து.. 3 மாத கைக் குழந்தை உட்பட 5 பேர் பலி.. நள்ளிரவில் நடந்த சோகம் !