Cinema

விடாத பழக்கம்.. ஷூட்டிங்கில் தகராறு: இனி நடிக்க கூடாது.. 2 நடிகர்களுக்கு தடை விதித்த மலையாள திரையுலகம் !

இந்திய திரையுலகில் தரமான திரைப்படம் கொடுப்பதில் முன்னணி வகிக்கும் ஒன்று தான் மலையாள திரையுலகம். இதில் அறிமுகமாகும் திரை கலைஞர்கள் சில நேரங்களில் இதன் மூலமே பல மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த சூழலில் அங்குள்ள 2 திரை நடிகர்களுக்கு அதிரடி தடை விதித்துள்ளது மலையாள திரையுலக சங்கங்கள்.

மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் ஷேன் நிகம். ஆரம்பத்தில் சில படங்களில் துணை கதாபத்திரமாக நடித்து வந்த இவர், 2013 ஆம் ஆண்டு வெளியான வெளியான நீலகாஷம் பச்சைக்கடல் சுவாச பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் கிஸ்மத், கும்பலாங்கி நைட்ஸ், இஷ்க், வெயில் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.

ஷேன் நிகம்

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'கொரோனா பேப்பர்ஸ்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போதும் இவர் கைவசம் சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். இதனிடையே இவர் படப்பிடிப்பின்போது அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் மலையாள திரை சங்கங்களில் புகார் அளித்தனர்.

அதேபோல் மற்றொரு பிரபல நடிகராக இருக்கும் ஸ்ரீநாத் பாசி என்பவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாத் பாசி - கும்பலாங்கி நைட்ஸ், ஆகாச கங்கா 2, ட்ரான்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் ஷூட்டிங்கின்போது போதை பொருள் உள்ளிட்டவையை பயன்படுத்தி தகராறு செய்து வந்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கேரளா திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு (FEFKA) மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டத்தில் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகிய நடிகர்களை இனி படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது. இது தற்போது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த சங்கங்கள் கூறுகையில், “போதைக்கு அடிமையான திரை கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது. ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி போதையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், சுயநினைவின்றி நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

அதுமட்டுமின்றி இருவரும் ஷூட்டிங்கின் போது போதையில் இருப்பதும் தெரியவந்தது. இது சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த 2 நடிகர்களுக்கும் இனி மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றது.

Also Read: “சிகரெட் அடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்..” - இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ந்துபோன மேடை !