Cinema

“சுடப்படுவீர்கள்.. தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள்” - கங்கனா வீட்டின் அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இமாச்சல பிரதேசத்தை சொந்த ஊராக கொண்ட இவர், 2006-ல் இந்தி திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2008-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இது அவருக்கு ஐந்தாவது படமாகும்.

பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் சில படங்கள்தான் நடித்துள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக் படமான 'தலைவி' படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ்நாட்டில் பெரிய விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அடி வாங்கியது. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான 'மணிகர்ணிகா' திரைப்படம் இந்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். இவர் மறைமுகமாக பாஜக ஆதரவாளராக இருந்து வருவதால்தான் கடந்த 2020-ல் இவருக்கு இந்திய திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பத்ம ஸ்ரீ' கிடைத்தாக பல விமர்சனங்கள் எழுந்தது.

அது மட்டுமின்றி உண்மையை அறியாமல் தனது ட்விட்டரில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதே இவரது வழக்கமாகும். இதனாலே நெட்டிசன்கள் இவரை ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுப்பர். அது மட்டுமின்றி 2020-ல் கங்கனாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் Y-plus பிரிவு பாதுகாப்பு ஒன்றிய அரசு வழங்கியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்து வருவதால் இவருக்கு பிடிக்காதவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இதனால் இவருக்கு பல்வேறு பாதுகாப்புகளை அவ்வப்போது வழங்கப்படுவது வழக்கம்.

இதனிடையே தன் வாயால் தானே கெடுவது போல், கடந்த 2020-ம் ஆண்டு மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கங்னாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து. அதிலும் குறிப்பாக கங்கனாவுக்கும், சிவசேனா கட்சியில் எம்.பி சஞ்சய் ராவத்துக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

இந்த வார்த்தை போரில், கங்கனா மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில் சட்டவிரோதமாக வீடு கட்டி வருவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்போது மகாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதால் கங்கனா தனது வீட்டை மீண்டும் புதுப்பிக்க தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வீட்டின் வெளியே போர்டு ஒன்று மாட்டப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் வீட்டில் வெளியே மாட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் "அத்துமீறி நுழையாதீர்கள். மீறினால் சுடப்படுவீர்கள். தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள்.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கங்கனா வீட்டில் மாட்டபட்டுள்ள இந்த வாசகம் பொருந்திய போர்டால் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழில் சந்திரமுகி படத்திலும், இந்தியில் தேஜஸ், திக்கு வெட்ஸ் ஷேரா, எமெர்ஜென்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் எமெர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் இந்திரா காந்தி வேடத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த சில மதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..