Cinema

“தவறான படங்களை அனுப்புறாங்க.. இதனால்தான் நமக்கு கிடைப்பதில்லை..” - Oscar குறித்து AR ரகுமான் கருத்து !

ஆண்டுதோறும் திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் விழா கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதுமுள்ள சிறந்த பாடல்கள், திரைப்படங்கள், நடிகர்கள் என அனைவரும் போட்டியிட்டு விருதுகள் வழங்கப்படும்.

அதில் இந்த ஆண்டு சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் வென்றுள்ளது. ஆஸ்கர் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த ஆவண குறும்படமாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட 'The Elephant Whisperers' வென்றது. இந்தியாவில் இருந்து அனுப்பட்ட படங்களில் நாமினேட் செய்யப்பட்டு இந்த இரண்டும் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும். இதுவரை சிறந்த பாடல் பிரிவில் இந்தியாவில் இருந்து எந்த பாடலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாட்டு நாட்டு பாடலே முதல் இந்திய ஆஸ்கர் பாடலாகும்.

இந்தியா சார்பில் சிறந்த படங்களாக ஆஸ்கருக்கு சுமார் 10 படங்கள் அனுப்பட்டது. அதில் எந்த படமும் நாமினேட் கூட ஆகவில்லை. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்காத படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து தகுதியான படங்கள் அனுப்பப்படுவது இல்லை. சில நேரங்களில் நமது திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதில்லை.

அதே சமயம் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன. ஆஸ்கர் குழுவில் என்ன நடக்கிறது என்பது மூன்றாவது நபர்கள் மூலம் தான் தெரிகிறது. ஆஸ்கருக்கு படங்களை தேர்வு செய்யும் முறை வெளிப்படையாக நடக்க வேண்டும். மேற்கத்திய பார்வையில் இருந்து படங்களை தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.

முன்னதாக ஆஸ்கர் 2023 விருதுக்கு இந்தி படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' அனுப்பட்டது. இந்த படமானது இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதோடு கண்டங்களையும் ஏற்படுத்தியது. அதோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழாவின்போது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரையிடப்பட்டது.

அப்போது இதில் நடுவர் குழு தலைவர் நடாவ் லாபிட், இந்த படத்தை “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது." என்று கருத்து தெரிவித்தார். உள்ளூரையும் தாண்டி, வெளிநாட்டு திரை பிரபலங்களாலும் இந்த படம் விமர்சிக்கப்பட்டது.

அப்படிபட்ட ஒரு படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் எழுப்பியது. இந்த சூழலில் ஆஸ்கர் வென்ற ஏ.ஆர். ரகுமானே, இந்தியா சார்பில் தகுதியற்ற திரைப்படங்கள் அனுப்படுவதாக கூறியுள்ளது திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி