Cinema

காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் நல்லடக்கம்.. முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு !

பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) நேற்று திடீரென்று மணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி.

1971-ல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா என 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு ஒன்றிய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் தான் ஆகிறது, அதற்குள்ளும் இவரது பிரிவு திரையுலகில் நீங்கா துயரம் அடைந்துள்ளது.

வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று திடீரென்று தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று தங்கள் விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து அவரது உடலை உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது இல்லத்தில் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதோடு அவரது வீட்டின் அருகே யாரேனும் வந்து சென்றனரா என்று சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அவரது உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் வாணி ஜெயராம், அவரது பெட்ரூமில் தவறி விழுந்து, அருகில் இருந்த மேசையில் இடித்து தலையில் அடிபட்டதாலே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு அவரது வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும் தடயவியல் துறை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு முடிந்த பிறகு அவரது உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், நடிகைகள், திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினம் "முடிசூடா இசை வாணியாக விளங்கிக் கொண்டிருக்கிற திருமதி வாணிஜெயராம் அவர்கள், நேற்றைய தினம் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்திலே பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர் திருமதி வாணிஜெயராம் அவர்கள். 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார். அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால் பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்னரே எதிர்பாரத நிலையில் அவர் மறைந்திருக்கிறார். அவரது மறைவு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக திரையுலகிற்கு நான் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். " என்றார்.

இந்த நிலையில் வாணி ஜெயராம் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்கள் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வாணி ஜெயராமின் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பகல் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Also Read: “என் கல்லூரி நண்பர் மறைவு வேதனை அளிக்கிறது..” - டிபி கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !