Cinema
பதான் : “யார் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி?”.. கங்கானாவின் விமர்சனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்.. Viral
பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 25-ம் தேதி வெளியானது.
திரையரங்கில் வெளியாகிய இந்த படத்திற்காக ஷாருக் ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்த நிலையில், இந்த படத்தை வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியது.
அதாவது, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.
ஏனெனில் இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர். அதோடு ஷாருக், தீபிகா உருவப்படம் எரிப்பு, செருப்பு மாலை உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்களில் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.
இப்படி தொடர் போராட்டங்கள் இருந்த போதிலும், அதனை கண்டுகொள்ளாத படக்குழு அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிட்டது. பல தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் 8,000 ஸ்க்ரீன்களிலும், அதில் இந்தியாவில் 5,500 ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டது. இந்த படம் வெளியாகிய முதல்நாளே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பாலிவுட் படம் வெளியீடு அன்று Boycott இல்லாமல் வெளியான மாஸ் ஹீரோ படமாக இந்த படம் இடம்பெற்றுள்ளது. மேலும் கீழே இறங்கி இருந்த பாலிவுட் திரையுலகை இந்த படம் மீண்டும் மேலே தூக்கி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கங்கனா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அதில், "'பதான் திரைப்படம் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி என்று சொல்பவர்களின் கூற்றை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால், யார் வெறுப்பின் மீதான யாருடைய அன்பு? என்பதை துல்லியமாக ஆராய வேண்டும்.
யார் டிக்கெட்டுகளை வாங்கி படத்தை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்? ஆம், அதுதான் இந்தியாவின் அன்பு. 80 விழுக்காடு இந்துக்கள் வசிக்கும் நாட்டில், எதிரி நாடான பாகிஸ்தானையும் ஐஎஸ்ஐஎஸ்ஐயும் நல்ல முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் பதான் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெறுப்பு, தீர்ப்புகளைக் கடந்த இந்த மனநிலைதான் இந்தியாவின் மகத்துவம். வெறுப்பு மற்றும் எதிரிகளின் அற்ப அரசியலை இந்தியாவின் அன்பு வென்றுள்ளது. இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்களாகவும், ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக மாறாது, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பதான் படத்தின் கதைக்களத்தின்படி அதற்கு 'இந்தியன் பதான்' என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்' என பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிமோ யாதவ் என்ற நெட்டிசன் ஒருவர், 'கங்கனா ஜி உங்களின் 'தக்கட்' திரைப்படம் முதல் நாளில் 55 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.2.58 கோடிதான் வசூலித்தது. 'பதான்' படம் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதானின் ஒருநாள் வசூல் கூட இல்லை உங்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல். இது உங்களின் விரக்தியைத் தவிர வேறில்லை" என பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவை கண்டு ஆத்திரம் கொண்ட கங்கனா "ஆம், தக்கட் ஒரு வரலாற்று தோல்விதான். இதை நான் எப்போது மறுத்தேன்? பத்து வருடங்களில் ஷாருக்கானின் முதல் வெற்றிப் படம் இது. இந்தியா அவருக்கு வழங்கிய அதே வாய்ப்பு நமக்கும் வழங்கும் என்று நம்புகிறேன். எல்லாத்தையும் கடந்து இந்திய தாராளமானது, ஜெய் ஸ்ரீராம்" என தெரிவித்துள்ளார். இவர்களது இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிமோ யாதவ், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் பாபர் அசாம், வேறு ஒரு கிரிக்கெட் வீரரின் காதலியோடு ஆபாச சேட் செய்வதாக இணையத்தில் பரப்பப்பட்ட வதந்தியை தனது பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். பின்னர் அது வதந்தி என்பதை உணர்ந்து, பாபர் அசாமிடம் பல முறை தனது ட்விட்டர் வாயிலாக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!