Cinema
சர்ச்சைக்கு நடுவே 100 நாடுகளில் வெளியான ‘பதான்’.. திடீரென எதிர்ப்பை பின் வாங்கிய இந்து அமைப்பு.. பின்னணி?
பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படம், இன்று வெளியாகியுள்ளது.
திரையரங்கில் வெளியாகும் இந்த படத்திற்காக ஷாருக் ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்த நிலையில், இன்று இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியது.
அதாவது, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.
ஏனெனில் இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். அதோடு ஷாரூக்கானையும் உயிரோடு கொளுத்துவோம் என்றும் இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள், அமைப்புகள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாருக், மற்றும் தீபிகாவின் உருவம் பொறித்த படங்களை தீயிட்டு கொளுத்தினர்.
தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், வெளியிட்டால் திரையரங்கு கொளுத்தப்படும் எனவும் இந்துத்துவ கும்பல் ஒரு பயங்கரவாதி போல் மிரட்டல் விடுத்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்தபோதிலும், இதனை பெரிதும் கண்டுகொள்ளாத திரைபடக்குழு அடுத்தடுத்து தங்கள் பாடல்களை வெளியிட்டு, இந்துத்துவ கும்பலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை நிரூபித்தது. மேலும் இதன் ட்ரைலர் அண்மையில் இந்தியாவிலுள்ள தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியானது.
ட்ரைலர் வெளியீட்டுக்கு பின்னர், அசாமில் உள்ள கெளஹாத்தி பகுதியில் இருக்கும் திரையரங்கில் பதான் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்ட்டரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அங்கமான பஜ்ரங் தல் அமைப்பு கிழித்ததோடு, ஷாருக்கான் உருவம் பதிந்த போஸ்ட்டரையும் தீயிட்டு கொளுத்தினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "இந்த பிரச்னை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்ட போதிலும், ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் அழைத்தால் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்னை என்பதை பார்ப்பேன்." என்று அலட்சியமாக பதிலளித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மறுநாள் ஷாருக் தன்னை தொடர்பு கொண்டதாக அசாம் மாநில முதலமைச்சர் ட்வீட் ஒன்று செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்னை இன்று காலை 2 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினார். கெளஹாத்தியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளையும் மீறி உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் 8,000 ஸ்க்ரீன்களிலும், அதில் இந்தியாவில் 5,500ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் வெளியீட்டு அன்று ஏதேனும் கலவரம் வெடிக்குமோ என்று பீதியில் இருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக இந்து அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை திரும்ப பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்புகள் கூறுகையில், "எங்கள் கோரிக்கையை அடுத்து படத்தில் இடப்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது படத்தை பார்த்துவிட்டு பின்னர் இதுகுறித்து பேசுகிறோம்" என்றுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிர்ப்புகள் இல்லாத நிலையில், உத்தர பிரதேசத்திலுள்ள இந்து அமைப்பு மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!