Cinema

“ஹாலிவுட்டில் படம் பண்ண ஆசையிருந்தால் வாங்க..”-ராஜமெளலியை அழைத்த அவதார் இயக்குநர்.. பூரிப்பில் ரசிகர்கள்!

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1,2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

கடந்தாண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்து திரையிடப்பட்டது.

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத் எழுதிய இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் இந்தாண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து விருதுகளை அள்ளிக்குவிக்கும் இந்த படம் பல்வேறு பிரிவுகளின் கீழ், படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் சிறந்த பாடலாகவும், சிறந்த இயக்குநராகவும், சிறந்த வெளிநாட்டு படமாகவும் விருதுகளை அள்ளி குவித்து வருகிறது.

இப்படி இருக்கையில் திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கர்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் RRR திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் RRR பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிந்துரையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு RRR படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ‘கோல்டன் குளோப்’ விருதை வென்றுள்ளது. எம்.எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய இப்பாடலை பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் பாடியுள்ளனர். பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 'டைட்டானிக்', 'அவதார்' பட இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் ராஜமெளலியை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அந்த படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன சீன்ஸையும் குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இதனை தான் இரண்டு முறை பார்த்ததாகவும், அதிலிருக்கும் ஒவ்வொரு சீனும் மிகவும் அருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டினார்.

இது தொடர்பான பதிவையும், வீடியோவும் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பெருமிதம் கொண்டார். மேலும் ஜேம்ஸ் கேம்ரூன் பாராட்டியதோடு இறுதியாக "நீங்க எப்பவாவது ஹாலிவுட்ல படம் எடுக்க ஆசைப்பட்டா நாம பேசலாம்" என்று ராஜமெளலியிடம் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை RRR படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: “8 வருடம்.. ரொம்ப வலிக்குது.. வயசாகுறதுக்குள்ள அஜித் சாரை மீட் பண்ணனும்..” -பிரேமம் பட இயக்குநர் உருக்கம்