Cinema

அமைச்சராகும் உதயநிதி : “ஒரு நண்பனாக எனக்கு பெருமையாக உள்ளது..” - நடிகர் விஷால் நெகிழ்ச்சி பேட்டி !

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் வரும் 22-ம் தேதி வெளியாகவிருக்கும் 'லத்தி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இன்று திருச்சிக்கு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதில் ஒரு நண்பராக தனக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "லத்தி படத்தில் போலிஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால் அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது, தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம். இந்த படத்தில் கடைசி 45 நிமிடங்கள் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும்.

ஓ.டி.டி 20 முதல் 25 சதவீதம் சினிமா பார்க்கும் மக்களை எடுத்து சென்றுவிட்டது. இருப்பினும் நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களை காண மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஓடிடியால் பார்வையாளர்கள் பிரிந்து தான் இருக்கிறார்களே தவிர, குறையவில்லை.

நடிகர் விஜயின் 67-வது படத்தில் நடிக்க எனக்கு கால்ஷீட் இல்லை; எனக்கு தூங்குவதற்கு கூட நேரமில்லை. கைவசம் இப்போது துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி படங்கள் இருப்பதால், விஜய் படத்தில் நடிப்பதற்கு நேரமில்லை.

நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தலை நிறுத்தி 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதனை கட்டி முடிப்போம்.

தற்போது என் நண்பர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். ஏற்கனவே எனது மற்றொரு நண்பரான மகேஷ் அமைச்சராக இருக்கிறார்; அந்த வரிசையில் தற்போது உதயநிதியும் இணைந்துள்ளார். அவர் அமைச்சராகவுள்ளது ஒரு நண்பனாக எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

Also Read: நாடாளுமன்ற தேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை.. வெற்றிக்கு வித்திட்ட உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம்!