Cinema

“லக லக லக லக..” - 'சந்திரமுகியா..? கங்காவா..?' - சந்திரமுகி 2-ல் களமிறங்கும் கங்கனா.. என்ன கதாபாத்திரம்?

மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மணிச்சித்ரதாழு'. இந்த படம் அங்கு பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதனை தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார்.

கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.

திரை ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் நின்று பேசப்பட்டு, ரசிகர்களால் வரவேற்கப்பட்ட பெரிய அளவில் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, சுபிக்‌ஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனா நடிக்கவுள்ள கதாபாத்திரம் முந்தைய பகுதியில் ஜோதிகா கதாபாத்திரமான 'கங்கா'வை விட அதிகம் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக கங்கானாவை படக்குழுவினர் அணுகியபோது, "சந்திரமுகி படம் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது" என்று கூறி, பாதி கதையை கேட்டே, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கங்கனா இதில் டிசம்பர் (இந்த மாதம்) முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், பிறகு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு ஜனவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Also Read: #FactCheck: 'Kashmir Files' சர்ச்சை.. நடாவ் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரப்பி வரும் கும்பல்.. ஆனால் உண்மை?