Cinema

ஒத்திவைக்கப்பட்ட 'LOVE TODAY' படத்தின் தெலுங்கு ட்ரைலர்.. சோகத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன ?

தமிழில் தற்போது வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் LOVE TODAY படத்தின் தெலுங்கு ட்ரைலர் இன்று வெளியாகவிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், இவரே நடித்து வெளியான திரைப்படம் தான் 'LOVE TODAY'. காதநாயகனாக அறிமுகமான இந்த படத்தில் இவருடன் சேர்ந்து இவானா, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் காதல் பற்றி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அவரது பாணியில் புது கண்ணோட்டத்துடன் இயக்கியுள்ளார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகரும் இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியான இப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல ரிவியூ கொடுத்ததால், அடுத்தடுத்து திரை ரசிகர்கள் இப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டாக பார்த்து வருவதால், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த இப்படத்தை பல திரையரங்குகள் வாங்கி திரையிட்டனர். தற்போது வரை 600 ஸ்கிரீனில் திரையிடப்பட்டு வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மொத்தம் ரூ.6 கோடி வசூலித்தது; தமிழ்நாடு அளவில் ரூ.4 கோடி வசூல் செய்தது.

நாளுக்கு நாள் தினசரி வசூல் கூடும் நிலையில், தற்போது இப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகும் நிலையில், தமிழ்நாடு அளவில் ரூ.45 கோடியை தாண்டியுள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.18 கோடி என்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு அளவில் விரைவில் ரூ.50 கோடி வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால், இதனை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதன்படி இதனை டப் செய்து, தெலுங்கு மொழியில் இதன் ட்ரைலர் இன்று வெளியாக இருந்தது.

அதன்படி தெலுங்கு திரை பிரபலம் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று (15.11.2022) மதியம் 12:10 மணிக்கு வெளியிடவிருந்தார். ஆனால், இன்று அதிகாலை 4 மணிக்கு பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். இதனால் இந்த படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read: தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!