Cinema

"'சொல்ல மறந்த கதை' : ஒற்றை கண்ணினால் அழுதுகொண்டே படமாக்கினேன்.." - இயக்குநர் தங்கர் பச்சான் நினைவு கூறல்!

பிரபல இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான், தான் இயக்கிய சொல்ல மறந்த கதை படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதுள்ளதை குறித்து பகிர்ந்துள்ளார்.

பார்த்திபன் நடிப்பில் வெளியான 'அழகி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் தங்கர் பச்சான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றது. அதன்பின் பிரபல இயக்குநர் சேரன் நடிப்பில் 'சொல்ல மறந்த கதை' படத்தை இயக்கினார்.

கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி தீப ஒளி பண்டிகையின்போது திரையரங்கில் வெளியான இப்படம் திரை ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப படமான இது, விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்கள் மக்கள் மனதை பெரிதளவும் ஈர்த்தது. இந்த நிலையில் சொல்ல மறந்த கதை படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன், அதற்கு இயக்குநர் தங்கர் பச்சானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கர் பச்சான், இந்த படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சொல்ல மறந்த கதை" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன. 2002 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள்.

தங்கள் வீட்டு கதையாகவும், பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு கதையாகவும், நண்பர்களின் கதையாகவும், உறவினர்களின் கதையாகவும் இருந்ததுதான் அப்படத்தின் தனிச்சிறப்பு. சிறந்த இயக்குநராக அறியப்பட்ட சேரன் நடிகராக அறிமுகமானார். அன்று ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடித் தீர்த்த "சொல்ல மறந்த கதை" யை இப்பொழுதும் இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்!

20 ஆண்டுகளுக்கு முன் ஒரு படைப்பாளனாக அப்படத்தைப் பார்த்த நான் மீண்டும் இன்று ஒரு சராசரி பார்வையாளனாகக் கண்டேன். காட்சிக்குக் காட்சி எத்தனை விதமான உணர்வுகள், உணர்ச்சிகள், பாத்திரப்படைப்புகள், உரையாடல்கள் என கண்களைத் திரையில் இருந்து விலகிக் கொள்ளாதபடி என்னைக் கட்டுண்டு வைத்துவிட்டது. கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் இறுதிவரை நிற்கவேயில்லை!

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் "தலைகீழ் விகிதங்கள்" புதினத்தை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போதெல்லாம் எவ்வாறு உணர்ச்சி பொங்கப்பொங்க அழுது அழுது வாசித்தேனோ, அதே போன்ற உணர்வுடன் தான் திரைக்கதை எழுதும் போதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் அழுது கொண்டே எழுதினேன்!

அவ்வாறேதான் ஒவ்வொரு காட்சியையும் பிலிம் சுருளில் பதிவு செய்யும் பொழுதும் கேமிராவில் ஒற்றை கண்ணினால் பார்த்தபடியே கண்ணீரோடு படமாக்கினேன்! 20 ஆண்டுகள் உருண்டோடிய பின்னும் இப்படத்தை இப்பொழுது கண்டபோது 'சிவதாணு - பார்வதி - சொக்கலிங்கம்' வாழ்க்கையிலிருந்து வெளியேற முடியவில்லை !

நமது மண் சார்ந்த, மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட, பண்பாடு மற்றும் உறவு நிலைகளை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்ததால்தான் அது மக்களின் மனதில் ஆழமாக குடி கொண்டு விட்டது என்பதை உணர்ந்தேன். இவ்வாறான அசல் தமிழ்த் திரைப்படங்களைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்!

ஒரு படைப்பாளனாக மக்கள் எதிர்பார்க்கும் இது போன்ற திரைப்படத்தை உருவாக்கும் எண்ணமும் உந்துதலும் என்னை மேலும் ஆட்கொண்டு விட்டன! என் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் இவ்வேளையில் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். நான் தற்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் மூலமாக உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மற்றொரு பதிவில், "இளையராஜா அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களிலும் பாடல்களை அவரே தான் இயற்றினார். எனது விருப்பத்திற்காக மட்டுமே அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவற்றுள் மூன்று பாடல்களை மட்டும் அவர் விருப்பத்திற்கிணங்க பிற கவிஞர்கள் எழுதினார்கள்.

சொல்ல மறந்த கதையில் அனைத்து பாடல்களும் அவர் இயற்றியது தான். அவருடைய இசையை மட்டுமே சுவைப்பவர்கள் பாடல் வரிகளையும் சுவைத்துப்பாருங்கள். அவர் மிகச் சிறந்த பாடல் ஆசிரியர். சிவத்தாணு மாமனாரால் அடித்து விரட்டப்பட்டு போக்கிடம் தெரியாமல் அலையும் பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட அவரே பாடிய 'பணம் மட்டும் வாழ்க்கையா' பாடலில் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

"உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு உனக்கு இடம் இல்லையா? உன் இடத்த எவன் பிடிப்பான் உறுதி உனக்கு இல்லையா? ஏர்முனையால் காயம் பட்டா எந்த நிலம் அழகுது? உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது. உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது”." என்று இளையராஜாவின் வரிகளை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார்.

Also Read: லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் உதவி இயக்குநர்.. இளைஞர்களுக்கு கோவை காவல் ஆணையர் சொன்ன Good News என்ன?