Cinema

'இந்தியன் 2' படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தையா? -வெளியான புதிய Update ஆல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யம்!

கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகரான கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால், படப்பிடிப்பு சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கமல் விக்ரம் படத்திலும் பிசியாக இருந்தார். அதோடு சங்கரும், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். மேலும் காஜலும் கர்ப்பமுற்று குழந்தை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது எல்லாம் சரியாக மாற மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது அடுத்தாண்டு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய update வெளியாகியுள்ளது.

அதாவது பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை யோக்ராஜ் சிங், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யோக்ராஜ் சிங்கின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் பெரிய மரியாதை. என்னை மேலும் புத்திசாலியாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன்2 படத்திற்கு தயாராகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் யுவராஜ் சிங்கின் ரசிகர்களுக்கும் இது புதிய update ஆக இருக்கிறது. யோக்ராஜ் சிங் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்குவரவில்லை" - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கதேச கேப்டன் !