Cinema

ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குனரை அடித்த பிரபல தமிழ் சீரியல் நடிகர் - போலிஸில் வழக்குபதிவு : நடந்தது?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'இதயத்தை திருடாதே' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் நவீன். இந்த தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கண்ட நாள் முதல்' என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியலில் மட்டுமின்றி, 'பூலோகம்', 'பட்டாஸ்', 'மிஸ்டர் லோக்கல்' உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் உள்ளனர். அதோடு தனது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், சீரியலில் நடித்ததற்காக விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், 'கண்ட நாள் முதல்' தொடரின் படப்பிடிப்பு சென்னை, மதுரவாயல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, ஷூட்டிங் தொடங்கிய போது, நவீன் படப்பிடிப்பு தளத்திற்கு வர தாமதமானது. எனவே அந்த தொடரில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் குணசேகரன் என்பவர், நவீனை அழைக்க சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே எதோ வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் நவீன், உதவி இயக்குநர் குணசேகரனை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் குணசேகரனுக்கு இரத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட, உடனே படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து உதவி இயக்குநர் குணசேகரன் நடிகர் நவீன் மீது சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும், சென்னை மதரவாயில் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்ல ரசிகர்களுக்கிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் நவீன் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா ? என்று கேள்விகள் எழுந்துள்ளது.

அண்மையில், நவீனுக்கும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கண்மணி என்பவருக்கும் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் நடிகராக இருந்தாலும் ஒரு மரியாதை வேண்டாமா என்று சமூக வலைதளங்களில் நவீனுக்கு எதிரான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து இதுவரை நவீன் தரப்பினர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

Also Read: அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!