Cinema
நடிகர்களுக்கு அல்ல.. கதைக்குத்தான் முக்கியத்துவம்: பகத் பாசிலின் 'மலையன்குஞ்சு' படம் எப்படி இருக்கு?
பகத் பாசில் நினைத்தால் எத்தனையோ கமர்ஷியல், ஸ்டைலிஷ் படங்களைக் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு திறமையும் ஸ்டைலும் அவருக்கு உண்டு. நேர்மறையான பாத்திரங்கள் கூட நடிக்கலாம். யாரும் அவரைக் கோபித்துக் கொள்ளவும் போவதில்லை. எனினும் பகத் பாசில் வேறு ரகமாகத்தான் இருக்கிறார். அதுதான் அவரின் வெற்றிக்கும் அவரை நோக்கிய ஈர்ப்புக்கும் காரணமாக இருக்கிறது.
மலையன்குஞ்சு படத்திலும் பகத் பாசில் அப்படித்தான் இருக்கிறார்.
மலையன்குஞ்சு படம் அடிப்படையில் சர்வைவல் டிராமா ரகத்தை சேர்ந்த படம். ஒரு இடரில் அல்லது விபத்தில் சிக்கி மீள்கிற கதையைக் கொண்ட படங்களைதான் சர்வைவல் டிராமா படங்கள் எனக் குறிப்பிடுகிறோம். கண்களிலேயே நடிப்பைக் கொட்டும் பகத் பாசில் ஒரு சர்வைவல் டிராமாவில் நடிக்கிறார் என்றால், ‘மனுஷனுக்கு நல்ல வேட்டை’ என தோன்றும். பகத் பாசிலின் நடிப்புதான் மொத்த படமுமாகவே இருக்குமென கூட தோன்றும். உண்மைதான். ஆனால் பகத் பாசிலையும் தாண்டி படம் கனம் கொள்கிறது. மலையாள சினிமாவின் அற்புதம் அது.
நடிகனுக்காகவோ நடிகைக்காகவோ கதை செய்யும் போக்கு மலையாள சினிமாவில் உண்டென்றாலும் குறைவாகவே உள்ளது. பரவலாக இல்லை. எப்பேர்பட்ட நடிகராக இருந்தாலும் மலையாள சினிமாவில் கதைக்குதான் நடிக்க வேண்டும். மசாலாவுக்கோ நாயகத்தன்மைக்காகவோ எல்லாம் நடிக்க முடியாது. சமீபத்தில் வெளியான ‘புழு’ படத்தில் கூட மம்முட்டி போன்ற பெரும் நடிகரே கதைக்கு ஒடுங்கிதான் நடித்திருப்பார்.
பகத் பாசிலின் நடிப்பு சிறப்பாக மிளிர்வதே அவர் கதைக்கு தேவையான அளவுக்கு நடிக்கிறார் என்பதே!
படத்தின் நாயகன் அனிக்குட்டன். சர்வீஸ் மெக்கானிக்காக பணிபுரிகிறான். அதுவும் அலுவலகத்தில் கிடையாது. வீட்டிலேயே அமர்ந்து ரிப்பேர் பார்த்துக் கொடுப்பவன். ரேடியோ, டிவி, லேப்டாப் போன்ற கருவிகளை சர்வீஸ் செய்யும் வேலை.
அனிக்குட்டனுக்கென ஓர் அறை. அதிகமாக வெளியே அவன் புழங்குவது கிடையாது. சாதியம் பீடித்தவன். இட ஒதுக்கீடை பழிப்பவன். அனிக்குட்டனின் தாய் கூட டீ, உணவு போன்றவற்றைக் கொடுக்க மட்டும்தான் அனிக்குட்டனின் அறைக்கு வருவார்.
எப்போதும் சிடுசிடுத்தபடி இருக்கும் பாத்திரம் அனிக்குட்டன் பாத்திரம். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து சில்லென இருக்கும் கிணற்றுத் தண்ணீரை ஊற்றிக் குளிப்பான். அவனுக்கென தனி நம்பிக்கை, தனி வாழ்க்கை முறை, தனி உலகம் இருக்கிறது. அதற்குள் எவரையும் அவன் விடுவதில்லை.
அனிக்குட்டனின் அறை அருகே இருக்கும் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதிகாலை ஐந்து மணிக்கு வேலையை செய்யத் தொடங்கும் இயல்பு கொண்டவன் அனிக்குட்டன். குழந்தை பக்கத்து வீட்டுக்கு வந்ததில் இருந்து நேரம், காலம் பார்க்காமல் அழுகிறது. அதன் அழுகுரல் அனிக்குட்டனை தொந்தரவு செய்கிறது. கூடுதலாக அண்டை வீட்டார் பட்டியல் சாதியினர் என்பதும் சேர்ந்து அனிக்குட்டனுக்கு குழந்தையின் அழுகை மீது வெறுப்பைக் கொடுக்கிறது. தன்னுடைய பரிசுத்தமான உலகுக்குள் ஒரு பட்டியல் சாதிக் குழந்தையின் அழுகுரல் கூட தொந்தரவு செய்கிறது.
அனிக்குட்டனின் தங்கை இன்னொரு சாதியைச் சேர்ந்த இளைஞனை திருமணம் முடித்தவள். அந்த அவமானத்தில் அனிக்குட்டனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்தே தங்கையுடன் அனிக்குட்டன் பேசுவதில்லை.
பொதுச் சமூகத்திடமிருந்து தள்ளி சாதியென்னும் கோபுர உச்சியில் தனியாக வசிப்பதை பெருமையாகக் கருதும் ஒருவன் ஒருநாள் விழுகிறான். அதலபாதாளத்துக்கு விழுகிறான். மரணத்தின் விளிம்பை எட்டுகிறான். அங்கு அவன் என்னவாகிறான் என்பதே படத்தின் மிச்சக் கதை.
படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!