Cinema

எதிர்ப்பை புறந்தள்ளி 5 விருதுகளை அள்ளிய படம் : சூர்யாவும் - சூரரைப் போற்று திரைப்படமும் கடந்து வந்த பாதை!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சூரரைப்போற்று'. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட்,உடுமலை கலாம், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

இந்தியாவின் முதல் ஜெட் விமானத்தை உருவாக்கிய GR கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான 'Simply Fly: A Deccan Odyssey' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், சூர்யாவின் 2D entertainment தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இந்த படம் வெளியான போது கொரோனா நேரம் என்பதால் நேரடியாக amazon prime ஓடிடி-யில் வெளியானது.

இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர், நடிகை, இயக்குநருக்கான Behindwoods Gold Icon Awards, Blacksheep Digital Awards, Indian Film Festival of Melbourne உள்ளிட்ட பல விருதுகளை சூர்யா, அபர்ணா, சுதா கொங்கரா பெற்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசை, ஒளிப்பதிவாளர், பின்னணி பாடகர் உள்ளிட்ட விருதுகளை வென்றது.

முன்னதாக ஆஸ்கர் போட்டியில் ஓடிடியில் வெளியான படங்களும் போட்டியிடலாம் என்று ஆஸ்கர் அறிவித்ததால், 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் படக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து 366 படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் 'சூரரைப்போற்று' படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்திருந்ததால் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு வெளியான இறுதிப்பட்டியலில் 'சூரரைப் போற்று' திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் 2020-க்கான சிறந்த நடிகருக்கான விருது 'சூரரை போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கும், நடிகை அபர்ணாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருதை இந்த படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கும், திரைக்கதை எழுதிய சுதா கொங்கராவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு, "சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, படம்" என 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரை ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் சூர்யா நாளை (ஜூலை 23) தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், தற்போது அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவித்துள்ளது, அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருது 2020-க்கான சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கான் ஆகிய இருவருக்கும் பிரித்து வழங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த படம் விருதுகளை அள்ளி வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு 'ஜெய் பீம்' திரைப்படம் வெற்றி பெரும் என்று திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க படுகிறது.

Also Read: 2020 தேசிய விருதுகள் அறிவிப்பு.. 10 விருதுகளைப் பெற்ற தமிழ்ப்படங்கள்: முழு பட்டியல் இதோ!