Cinema

"ஒடுக்குமுறையை உற்பத்தி செய்யும் இயந்திரம்" : பேசாப் பொருளைப் பேசிய ‘டாணாக்காரன்’!

ஒரு குறிப்பிட்ட வயது வரை காவலராகவோ காவல்துறை அதிகாரியாகவோ ஆக வேண்டும் என்கிற ஆசை இளைஞர்களுக்கு இருக்கும். மிடுக்கான உடை, நேர்மை, நியாயம் என்றெல்லாம் திரையில் உலா வந்த காவலர்களே அதிகம். ‘காக்க காக்க’ படத்தைப் பார்த்து ஜிம் போன கூட்டத்தில் நானுமே ஒருவன். அதே படத்தில் ‘என்கவுண்டரு’க்குக் கொடுக்கப்படும் விளக்கம் கூட மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் காவல்துறை வேறொன்றாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘காவலர்களும் மனிதர்கள்தானே’ எனக் காபி கொடுத்த இளைஞர்களை அடுத்த ஒரு மணி நேரத்தில் லத்தியை சுழற்றி அடிக்க முடியும் காவல்துறையால். எந்தவித அறம் சார்ந்த, அடிப்படை மனித உணர்வும் அற்ற, சார்லி சாப்ளின் குறிப்பிட்டபடி ஆணைகளுக்கு அடிபணியும் Unnatural Men ஆகத்தான் காவலர்கள் இருக்கின்றனர்.

அடிப்படையில் வானளாவிய அதிகாரம் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அடிப்படை உரிமைகளுக்கான சங்கம் அவர்களுக்குக் கிடையாது. எவனை அடித்துத் துவைத்துக் கொன்றே போட்டாலும் கூட அதிகபட்சம் ‘சஸ்பென்சன்’தான். அல்லது இடமாறுதல். டிஸ்மிஸ் அல்லது தண்டனை என்பது மிக அரிது. வேலைப்பளு, வேலை நேரம் பற்றி எதுவும் காவலர்கள் சொல்ல முடியாது. ஆனால் காவலர்கள் இறந்தால் பல லட்சங்களும் சமயங்களில் கோடியும் கூட நிவாரணமாக வழங்கப்படும்.

குடிமக்களை மட்டுமல்ல, காவலர்களையே கூட மனிதர்களாத மதிக்காத துறைதான் காவல்துறை. ஆனாலும் எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை. எப்படி இத்தனை குரூரமானவர்களாக, ஏவலாட்களாக, ரோபோக்களாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு காவல்துறை முதன்முதலாக இந்திய ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட வரலாறைச் சொல்லி படத்தைத் துவக்குகிறார் ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ்.

காவலரானால் மக்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையுடன் வருபவன் நாயகன். கூடவே இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தேர்வு எழுதி அப்போதுதான் நியமனம் பெற்ற ஒரு குழுவும் வருகிறது.

லட்சியவாதத்துடன் இருப்பவனும் காவலரானால் எல்லா அராஜாகமும் செய்யலாம் என்பவனும் இருபது வருடங்களுக்குப் பிறகென்றாலும் அரசாங்க வேலை குடும்பத்துக்கு முக்கியம் என வந்திருப்போரும் ஒன்றாக பயிற்சியில் நிற்கின்றனர். பயிற்சி அளிக்கும் காவலர்களில் ஒருவர் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவர். இன்னொருவர் பதவி உயர்வு பெறக் காத்திருப்பவர். இருவருக்கும் மேலே இருப்பவர் முதலாமவரின் பதவி உயர்வை பறித்து வந்தவர். அவருக்கும் மேலே மொத்த காவல்துறையையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.

பதவி உயர்வு பெறக் காத்திருப்பவர், பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டவர் பயிற்சி அளிக்கும் குழுவை தோற்கடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலே அமைப்பின் பிரதிநிதியாக இருப்பவருக்கு பயிற்சி முடிந்து வருபவன், எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘ஸ்விட்ச் போட்டால்’ ஆளைக் கொல்லும் இயந்திரமாகி வர வேண்டும். கூடவே இந்தியச் சமூகத்தின் பிரத்யேக ஒடுக்குமுறைக் கருவியான சாதி.

ஒரு காவலனின் மனிதாபிமானம் எப்படி அமைப்புரீதியாகக் காயடிக்கப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக ‘டாணாக்காரன்’ விவரித்திருக்கிறது.

பளபளவென மின்னும் உயர்பதவியில் இருக்கும் காவலன் எனில் அமைப்புக்கேற்ப குரூர எண்ணெயை அள்ளியள்ளி ஊற்றி ஒடுக்குமுறையை உற்பத்தி செய்யும் இயந்திரம் என அர்த்தம். பதவி உயர்வு இன்றி சாமானியக் காவலராக இருப்பவர் எனில், வேறு வழியேதுமின்றி தனக்கே முரணாய் உழன்று கொண்டிருக்கும் துருப்பிடித்த இயந்திரம் என அர்த்தம். ஆனால் ஒன்று, காவலராக இருக்கும் ஒருவன் நிச்சயம் இயந்திரமாக மட்டுமே இருக்க முடியும்.

படத்தில் வரும் ‘சித்தப்பா’ பாத்திரம் அனைவரையும் உலுக்கும் பாத்திரம். நகைச்சுவையில் அரசியல் கட்டி அதிகாரங்களை ரோட்டுக்கு இழுக்கும் பூபாளம் பிரகதீஸ்வரன் ‘சித்தப்பாவாக’ குணச்சித்திரம் காட்டியிருக்கிறார். நாயகன் அமைப்பால் வீழ்த்தப்படுகிறான். ஒடுக்குமுறையை அமைப்பு வெல்ல வைக்கிறது. அமைப்பைப் பற்றியும் அதன் சதி மற்றும் அரசியல் பற்றியும் தெரியாமல் அதைத் தொடர்ந்து நம்பும் அப்பாவிகள் சித்தப்பாக்களாக இருக்கிறோம். இந்த அமைப்பு ஒவ்வொரு அடியிலும் நம்மை வீழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

அரசின் பிரதான ஒடுக்குமுறைக் கருவிகளில் ஒன்று காவல்துறை என்றான் புரட்சியாளன் லெனின். அதன் அரசியலைப் பேசும் இடத்திற்கு தமிழ்சினிமாவை கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் ‘டாணாக்காரன்’.

Also Read: மீண்டும் தள்ளிப்போன சிம்பு படம்... வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர்! #5in1_Cinema