Cinema
Valimai Update: கோடிக்கணக்கானோர் வலிமை அப்டேட் கேட்கும்போது நான் அவரிடம்.. வைரலாகும் இயக்குநரின் பதிவு!
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் ஹெச்.வினோத்.
இதனையடுத்து இந்தியில் வெளியான பிங்க் படத்தை அஜித் நடிப்பில் ரீமேக் செய்து வெற்றியை கொடுத்தார். தற்போது அதே வெற்றிக் கூட்டணியுடன் வலிமை படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் ஹெச்.வினோத்துக்கு இன்றுதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சக திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், சமூக வலைதள வாசிகள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உடன்பிறப்பே பட இயக்குநர் ரா.சரவணன் ஹெச்.வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத்தின் குணங்கள் குறித்தும் அவரது பாணி குறித்தும் குறிப்பிட்டுள்ள ரா.சரவணன் சக இயக்குநராகவும் திரைப்படத்துறையினராகவும் மட்டுமல்லாமல் அவரது நீண்ட கால நண்பரும் ஆவார்.
அதில், தனித்த சிந்தனையில் எப்போதுமே என்னை வியக்க வைப்பவர் வினோத். எப்போதுமே மாறாத அந்த எளிமை அப்படியே இருக்கிறது எனக் குறிப்பிட்டு வினோத்துடனான உரையாடல்கள் குறித்த இரு சம்பவங்களையும் இரா.சரவணன் பகிர்ந்துள்ளார்.
மேலும், “சில வாரங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் செல்வதாகச் சொன்னார். அங்கு நல்ல தேன் கிடைக்கும் என முன்பே சொல்லி இருக்கிறார். அதனால், “ஒரு லிட்டர் புளியமரத்துத் தேன் கொண்டு வாங்க” என்றேன். கோடிக்கணக்கானோர் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கையில், நான் வலிமை இயக்குநரிடம் தேன் கேட்டேன். இரண்டாவது நாளே தேனோடு வந்து, “டேஸ்ட் பண்ணிச் சொல்லுங்க” என்றார். கையில் ஊற்றிச் சுவைத்து, “தேன் மாதிரி இருக்குது” என்றேன். “இதான்யா நீ” என அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே...” என வினோத் பற்றி சிலாகித்துள்ளார்.
தொடர்ந்து, வெற்றியும் புகழும் ஒரு மனிதனை துளியளவும் மாற்றாமல் இருப்பது அநியாய ஆச்சர்யம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா... இயற்கையைக் கொண்டாடுகிற / சுற்றுச்சூழல் மீது காதல் கொண்டிருக்கிற /சமத்துவத்தைப் பேணுகிற / பெரிது கண்டு வியக்காத / சுகங்களில் லயிக்காத /எல்லோர் நலம் நாடுகிற நல்ல மனசு பல்லாண்டு வாழ்க! என தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!