Cinema

உப்பெனா படத்தின் கதை திருடப்பட்டதா? தமிழில் ரீமேக் செய்ய தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான 'உப்பெனா' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சுகுமார் என்பவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான உப்பெனா, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த எஸ்.யு.டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான தனது தந்தை எஸ்.உதயசூரியனின் மூலம் சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தால் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தன் தந்தையுடன் கதை விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதாகவும், அதன் பின்னர் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குநராகவும், ஜெயக்குமாரின் திரைக்கதை, மகாபலிபுரம் ஆகிய படங்களில் பணியாற்றி, பின்னர் அய்யாசாமி என்ற படத்தில் விவசாயியாக நடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தான் உருவாக்கிய உலக மகன் என்ற கதையை தர்மபுரியை சேர்ந்த சம்பத் என்ற உதவி இயக்குநரிடம் 2015ஆம் ஆண்டு தெரிவித்து இருந்ததாகவும், அது மிகவும் பிடித்துப்போய் அதைப் படமாக்கலாம் என அவர் உத்தரவாதம் அளித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

காதலின் புனிதத்தை உணர்த்தும் புதிய கருத்துக்களுடன் கூடிய தனது கதையில் தமிழ் நடிகர்கள் யாரும் நடிக்க முன்வராததால், தெலுங்கு பட உலகில் முயற்சிக்கலாம் என சம்பத் தெரிவித்ததால், கதையின் கரு முதல் திரைக்கதை வரை அனைத்தும் அடங்கிய தொகுப்பை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். சம்பத்துக்கு அனுப்பிய தனது உலக மகன் படைப்பு சிலரால் திருடப்பட்டு, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, உப்பெனா படத்தின் கதை தன்னுடையது என்று அறிவிக்க வேண்டுமெனவும், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டுமெனவும், பிற மொழிகளில் ரீமேக் உரிமையை விற்க தடை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

டல்ஹவுசி பிரபு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழக்கு குறித்து விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் புஜ்ஜி பாபு சனா, இயக்குனர் சுகுமார், உதவி இயக்குனர் சம்பத் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Also Read: ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தால் கருத்து சுதந்திரத்துக்கு கேடு விளைவிக்கும் - நடிகர் கார்த்தி சாடல்!