Cinema

“Hotstar-ல் வெளியாகும் ‘ஈஸ்வரன்’.. வில்லனாக நடிக்கிறாரா ஜெய்?” : புதுப்பட தகவல் - சினிமா துளிகள்!

மிகக் குறைந்த காலத்தில் பரபரப்பாக எடுத்து முடிக்கப்பட்ட படம் `ஈஸ்வரன்'. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த இந்தப் படம் பொங்கல் ரிலீஸாக வெளியானது. இதில் சிம்பு உடன் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், பாலசரவணன் என பல பேர் நடித்திருந்தனர்.

விஜயின் மாஸ்டர் படம் வெளியான சமயத்த்தில் வெளியானது, படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்களால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ரிலீஸுக்கு முன்பு இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தால் அந்தப் படத்துக்கான வரவேற்பும் லாபமும் பெரிய அளவில் இருந்திருக்கும். ஆனால் படத்தின் ரிசல்ட் தெரிந்த பின்பு, எந்த ஓடிடியும் இந்தப் படத்தை வாங்க முன்வராமல் இருந்தது.

இதற்கு, படத்திற்கு சொல்லப்பட்ட விலை காரணமாக கூறப்பட்டது. இப்போது ஒரு வழியாக `ஈஸ்வரன்' படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் 12, அதாவது நாளை இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதை ட்விட்டர் தளத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் படம் பார்க்காத இன்னும் பல ரசிகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனா நடிக்கிறாரா ஜெய்?

நடிகர் ஜெய், சுசீந்திரன் இயக்கும் `சிவ சிவா' மூலம் இசையமைப்பாளர் ஆகிறார் என சென்ற வருடம் அறிவிக்கப்பட்டது. இப்போ கடந்த சில வாரங்களாக ஜெய் வில்லனாக நடிக்க இருக்கும் தகவலும் பரவிக் கொண்டிருந்தது. இயக்குநர் பத்ரி வெங்கடேசன் இயக்கும் அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து படத்தை தயாரிக்க இருப்பது சுந்தர் சி.

இந்தப் படத்தில் ஜெய் தான் வில்லன் என சொல்லப்பட்டது. இன்னும் அதைப் பற்றிய உறுதியான அறிவிப்பே வெளிவராத நிலையில் மறுபடி இன்னொரு படத்திலும் ஜெய் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இயக்குநர் அட்லியுடைய உதவி இயக்குநர் ஒரு படத்தை இயக்குகிறார், அந்தப் படத்தை அட்லி தன்னுடைய A for Apple Production நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில்தான் ஜெய் அடுத்து வில்லனாக நடிக்கிறார் என தகவல் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜெய் நடித்து வெளியான `ட்ரிப்பிள்ஸ்' வெப் சீரிஸ் வந்தபோது, அதுக்காக அவர் கொடுத்த பேட்டிகளில், "எனக்கு க்ரே ஷேட் உள்ள கதாபாத்திரங்கள் பண்ண விருப்பம் இருக்கு. என்னோட அடுத்து வரும் சில படங்கள்ள வில்லனா நடிக்கிறதுக்கான பேச்சுகளும் போயிட்டிருக்கு" என சொல்லியிருந்தார். அதனால் இந்த செய்திகள் உண்மையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.