Cinema
"மலர் டீச்சராக என் முதல் தேர்வு நடிகை அசின்" : மனம் திறந்த ‘பிரேமம்’ இயக்குநர்!
சினிமா பிரபலங்கள் பொதுவாக சமூகவலைதளங்களில் வந்து ரசிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கமான ஒன்று. இதை தொடர்ந்து செய்யும் சினிமா பிரபலங்களில் ஒருவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் ரஜினியை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு இவர் பதிலளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, "என்னிடம் ஃபிலிம்மேக்கிங் பற்றி எது வேண்டுமானாலும் கேளுங்கள். எனக்குத் தெரிந்தவற்றுக்கு பதிலளிக்கிறேன். தெரியவில்லை என்றாலும் தெரிந்துகொண்டு பதிலளிக்கிறேன். ஸ்டார்ட்" என முகநூலில் பதிவிட்டிருந்தார். உடனடியாக சரசரவென கேள்விகள் வந்து குவிய ஆரம்பித்தன. பெரும்பாலும் இதில் பிரேமம் படம் பற்றியே கேட்கப்பட்டது. அதன் திரைக்கதை பற்றியும் அதன் உருவாக்கம் குறித்துமே பலரும் கேள்வி கேட்டிருந்தனர்.
அப்படி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஆச்சர்யமூட்டும் ஒரு தகவலை தந்தார் அல்போன்ஸ் புத்ரன். "உங்கள் படங்களில் தமிழ் மொழி மீதான உங்கள் ஆர்வம் தெரிகிறது. குறிப்பாக மலர் கதாபாத்திரம், பிறகு படத்தில் நீங்கள் பயன்படுத்தும் தமிழ் பாடல்கள். இது நீங்கள் சென்னையில் வசித்ததால் வந்த தாக்கமா? தமிழ் மொழியின் தாக்கம் மலையாள சினிமாவில் இருப்பதை உணர்கிறீர்களா?, மலர் கதாபாத்திரத்திற்கு பதிலாக ஒரு மலையாளம் பேசும் பெண்ணை மாற்றுவது பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?" எனக் கேட்டிருந்தனர்.
அதற்கு "நான் முதலில் எழுதும்போது மலையாளத்தில் தான் எழுதினேன். மலையாள வெர்ஷனில் நடிகை அசின் மலராக நடிக்க வேண்டும் என விரும்பினேன். அந்த கதாபாத்திரம் கொச்சியிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால், என்னால் அசினை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிவின் கூட முயற்சித்தார்.
பிறகு அந்த யோசனையை கைவிட்டு, தமிழில் எழுதினேன். இவை எல்லாம் ஸ்க்ரிப்ட் நிலையிலேயே நடந்தது. நான் ஊட்டியில் படித்தேன், சினிமா படிப்புகளுக்காக சென்னையில் வசித்தேன். இதுதான் என்னுடைய சினிமாவில் தமிழ் கனெக்ட் இருப்பதற்கான காரணம்." என பதிலளித்தார் அல்போன்ஸ் புத்ரன்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!