Cinema

அரசுக்கு எதிராக பிரசாரம்... வீட்டுச்சிறையில் படமெடுத்த ஈரான் இயக்குநர் - பனாஹியின் This Is Not A Film !

2010 ஆம் ஆண்டு, ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக மேடை பிரச்சாரம் செய்ததற்காக, ஜாபர் பனாஹி (Jafar Panahi) என்னும் இயக்குநர், கைது செய்யப்பட்டு தன் வீட்டிலேயே அடைக்கப்படுகிறார். அதோடு 20 வருடத்திற்கு படம் இயக்கவோ, திரைக்கதை எழுதவோ கூடாது. அதுமட்டுமின்றி, ஆக்‌ஷன் /கட் என்ற வார்த்தையே பயன்படுத்தக்கூடாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார் ஜாபர் பனாஹி.

ஆனால், இது எதையுமே ஜாபர் ஒரு பெரும் தடையாகக் கருதவில்லை. வீடியோ கேமராக்களை கையாளக்கூடாது என்ற காரணத்தால், தன் கைபேசியில் உள்ள கேமராவை பயன்படுத்தினார், பனாஹியின் நண்பரும் இயக்குனருமான 'மொஜிடப மிர்தாமஸப்பும்' (Mojtaba Mirtahmasb) அன்றைய தினம் பனாஹியின் வீட்டிற்கு வந்து, தன் வீடியோ கேமராவை கொண்டு, ஜாபர் தன் நிலைமையை விளக்கி கூறுவதை படம் பிடிக்கிறார்.

தான் செய்ததாக கூறப்படும் குற்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் பனாஹி. அவரது வழக்கறிஞர் அலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரு சந்தோஷமான செய்தி என்று குறிப்பிட்டு, "நீங்கள் பயப்பட வேண்டாம், உங்கள் சிறை நாட்களை குறைக்க வழி இருக்கிறது" என்கிறார். "நான் சிறை செல்லாமல் இருப்பது தானே சந்தோசமான செய்தியாக இருக்க முடியும். என் சிறை தண்டனையை குறைப்பது எவ்வாறு எனக்கு சந்தோசத்தை அளிக்கும்? " என்று ஜாபர் கொதித்தெழுகிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததால், ஒருவரை 6 ஆண்டுகள் சிறையில் அடைப்பது எந்த வகையில் நியாயமாக அமையும்! ஒரு கட்டத்தில் தான் எழுதி வைத்திருந்த கதைகளை கேமரா முன் அமர்ந்து சொல்லத் துவங்குகிறார். இதை எல்லாம் இன்னும் 20 வருடங்களுக்கு என்னால் ஒரு முழுப் படமாக இயக்கமுடியாது என்று புலம்புகிறார். இவ்வாறாக பயணிக்கிறது "This Is Not A Film"

இவ்வாறாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தை, சிறிய பென்டிரைவில் பதிவேற்றி, அதனை ஒரு பிறந்தநாள் கேக்கில் மறைத்து வைத்து, யாருக்கும் தெரியாமல் தன் நண்பர்களின் உதவியுடன், கேன்னஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்புகிறார். அவர் கைது செய்யப்படுவதை கண்டித்து உலகமெங்கும் இருக்கும் திரைத்துறையினர் அனைவரும் எதிர்க்குரல் எழுப்பினர். ஒரு இயக்குநர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று உலக மக்கள் போராடியது அதுவே முதல் முறை.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவரும் போராடியதின் பலனாக அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்படுகிறார். எந்த நேர்காணல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது, படங்களும் இயக்கக்கூடாது என்ற விதிமுறை அப்படியே 20 வருடத்திற்கு நீடித்தது. இது எதுவுமே ஜாபரை திரைப்படம் இயக்குவதில் இருந்து தடை செய்யவில்லை.

சில வருடங்களில் அவரின் வீட்டுச்சிறை முடிவுக்கு வருகிறது. ஆனால் திரைப்படம் இயக்கவோ, திரைக்கதை எழுதவோ, கூடாது என்ற தீர்ப்பு இன்னும் முடிவுறவில்லை. அதுமட்டுமின்றி, ஈரானை விட்டு பனாஹி வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை செய்யப்பட்டிருந்தது.

கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட தன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என அனைத்தையும் ஒரு துணியால் மூடி, வீட்டிற்குள் இருந்தபடியே இன்னொரு படத்தை இயக்குகிறார், அந்தப்படத்திற்கும் ஒரு திரைப்படத்தை போன்று உருவம் கொடுக்காமல், இஸ்லாம் மதத்தில் இருக்கும் ஒரு பிரச்னையை கையிலெடுத்து விவாதிக்கிறார். அது "கிளோஸ்ட் கர்டென்ஸ்" (Closed Curtains) என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகிறது.

மீண்டும் சில ஆண்டுகள் கழித்து, அவர் வாழ்ந்து வரும் ஈரானின் தெக்ரான் என்னும் பகுதியில், ஒரு நாள் டாக்ஸி ஓட்டுநராக, வாகனத்தில் கேமராவை பதித்து, அங்கு நடக்கும் சில முக்கிய பிரச்சனைகளை அன்று அவரின் டாக்ஸியில் பயணிப்பவர்களை வைத்து பேசுபொருளாக்குகிறார்.

இந்த படம் "டாக்ஸி" (Taxi) என்ற தலைப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகிறது. ஆனால், இதில் குறிப்பிட்டுள்ள மூன்று படங்களோடு சேர்த்து, பனாஹி இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை அவரின் தாய்நாடான ஈரானில் இன்று வரை தடைசெய்யப்பட்டு இருக்கின்றது என்பது கவலைக்குரிய ஒன்று. யாராகினும், ஒரு கலை படைப்பை தடுக்க முடியும். ஆனால் ஒரு படைப்பாளியை தடுக்க முடியாது என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர் ஜாபர் பனாஹி !

Also Read: உச்ச நட்சத்திரங்கள் தயங்கியதை செய்த நிவின் பாலி - புதிய பாதைக்கு அடிகோடிட்ட ‘மூத்தோன்’ !