Cinema

கதை திருட்டு விவகாரம்: அமேசான் பிரைமில் இருந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் நீக்கம்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாகக் கதை திருட்டு புகார்கள் அதிகளவில் எழுந்து வருகிறது. அவ்வகையில், கடந்தாண்டு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஹீரோ' திரைப்படம் கதை திருட்டு பிரச்சினையில் சிக்கியது.

இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருந்த போஸ்கோ பிரபு ஹீரோ படம் என்னுடைய கதை தான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கம், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் எனக் கடிதம் அளித்தது.

இதனைத் தொடர்ந்து உதவி இயக்குநர் போஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் படம் திரையரங்கில் வெளியாகிவிட்டதால், இதர மொழிகளில் வெளியாவது, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாவது ஆகியவற்றுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் திரைப்படம் வெளியாகவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் இணையதளத்தில் ஹீரோ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட சக்தி திரைப்படம் வெளியானது.

நீதிமன்ற தீர்ப்பை அமேசான் நிறுவனத்துக்கு போஸ்கோ அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து, அமேசான் நிறுவனம் தங்களுடைய தளத்திலிருந்து 'ஹீரோ' படத்தை நீக்கியுள்ளது. அதேபோல், விரைவில் 'ஹீரோ' படத்தை ஒளிபரப்ப திட்டமிட்ட சன் தொலைக்காட்சி அதனை நிறுத்திவைத்துள்ளது.

இதனால், தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் இரண்டுக்கும் பெற்ற பணத்தைத் திரும்ப அளிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அருண் விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்துக்கு நேர்ந்த சோகம் : பொங்கிய கனடா ஊடகம் - காரணம் என்ன? #Mafia