Cinema

இந்தியாவைத் தவிர உலகம் முழுதும் விருதுகளைக் குவிக்கும் ‘ராட்சசன்’: சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஜிப்ரான்!

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி த்ரில்லிங் ஹிட் அடித்த படம் ராட்சசன். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச்சென்ற இந்த படம் வர்த்தக ரீதியிலும் அமோக வெற்றியை பெற்றது.

தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகி வெளியானது ராட்சசன். தற்போது இந்தியிலும் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: டோலிவுட் டூ பாலிவுட் : இந்தியில் தயாராகிறது சைக்கோ க்ரைம் த்ரில்லர் ‘ராட்சசன்’ ?

இதற்கிடையில், இந்தியாவின் தேசிய விருது கூட பெறாத ராட்சசன் படம் உலக நாடுகளில் நடைபெறும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும், பல்வேறு விருதுகளை குவித்தும் வருகிறது. படத்தின் கதை, திரைக்கதை என பல பிரிவுகளில் ராட்சசனுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 'ராட்சசன்' படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசை்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யூடியூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.

கேட்பவர்களின் நாடி நரம்புகளுக்கு சிலிர்ப்பூட்டும் இந்த இசை, 'எக்ஸ் ஃபைல் தீம்'களின் இந்தியப் பதிப்பு என்று இசை ஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை வென்று வருகிறார்.

இதோ இந்தப் பட்டியலில் மேலும் ஒரு புதிய பெயர் சேர்ந்திருக்கிறது. 'ராட்சசன்' படத்துக்காக சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது ஜிப்ரானுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாவின் ஓர் அங்கமான ஃபுயூஷன் சர்வதேச திரைப்பட விழா வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன.

இந்தக் கடும் போட்டியில் ஜிப்ரான் இசையமைத்த 'ராட்சசன்' படம் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருதை வென்றிருக்கிறது. இது மேலும், அப்படக்குழுவினருக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.