Cinema
ஷாருக்கானை இயக்குகிறாரா அட்லீ? - பாலிவுட்டில் கசிந்த தகவல்!
இயக்குநர் ஷங்கரின் படங்களில் உதவி இயக்குநர்களில் ஒருவராக தனது சினிமா பணியை தொடங்கிய அட்லீ தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது முதல் படமான ‘ராஜா ராணி’யின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்திருந்தாலும், அட்லீக்கு சினிமா உலகம் புதிதல்ல என்ற வகையிலேயே ராஜா ராணி அமைந்திருக்கும். அதனையடுத்து, கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து இரண்டாவது படமான தெறியை இயக்கியதும் அட்லீக்கான மதிப்பு மேலும் கூட அதற்கு மேன்மேலும் அழகு சேர்த்தது ‘மெர்சல்’.
இந்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது அட்லீயின் ‘பிகில்’. தமிழ் சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாத கமர்சியல் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அட்லீ.
இந்த நிலையில், பிகில் திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடனேயே அட்லீயின் அடுத்த படம் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் ஆக்ஷன் நிறைந்த பக்கா கமர்சியல் கதையம்சத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், இது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஷாருக்கானின் ஜீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியில் ஹிட் அடிக்காததால் சற்று தளர்ந்து போயுள்ள அவர், அடுத்த படத்தில் நடிப்பதற்காக பல பாலிவுட் இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான அட்லீயுடன் ஷாருக்கான் இணையவிருப்பதாக வந்துள்ள செய்தியை அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானால் அவரது ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒப்பந்தமானால் அட்லீக்கு சம்பளமாக ரூ.30 கோடி வரையில் கிடைக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அட்லீ, ஷாருக்கான் கூட்டணி உறுதியானால் பிகில் பட ரிலீஸுக்கு பிறகு வருகிற டிசம்பர் மாதமே படத்துக்கான ஷூட்டிங் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டு சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானுடன் இயக்குநர் அட்லீ சந்தித்துப் பேசியது அந்த சமயத்தில் வைரலானது.
விஜய்யின் பிகில் படம் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் ஷாருக்கான் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுவார் என்றும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!