Cinema
தமன்னாவின் பெட்ரோமாக்ஸை வெளியிட தடை இல்லை : விசாரணை ஒத்திவைப்பு!
நடிகை தமன்னா நடித்துள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ படத்துக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை வரும் 14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் படம் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
நடிகை தமன்னா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ். ரோஹின் வெங்கடேசன் இயக்கி, ஈகிள்ஸ் ஐ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி விஜய் ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா’ என்ற படத் தலைப்பை 2016ம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது படத் தலைப்பை போல உள்ள பெட்ரோமாக்ஸ் படத்தை வெளியிட்டால் தனக்கு இழப்பு ஏற்படும் எனவும் இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறும்படி மத்திய தணிக்கை வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், இருப்பினும் படத்தை நாளை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முனைப்புக் காட்டி வருவதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனால் நாளை பெட்ரோமாக்ஸ் படம் வெளியாவதில் எந்த இடையூறும் இல்லை.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!