Cinema

லாஜிக் இல்லைன்னா பரவாயில்லை... கதையாவது வேண்டாமா? : சந்தானத்தின் ‘A1’ விமர்சனம்!

இயக்கம்: ஜான்சன்.K
நடிப்பு: சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா மனோகர், சாமிநாதன், மீரா கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
எடிட்டிங்: லியோ ஜான் பால்

ஒரு ரௌடி ஐயர் பையனைத் தான் காதலிப்பேன் என சபதமேற்கும் ஹீரோயின், சந்தானத்தை லோக்கல் பையன் என்பது தெரியாமல் காதலிக்கிறார். தன் தந்தைக்குப் பிடிக்காததால் காதலலை முறித்துக் கொள்கிறார். ஊரே கொண்டாடும் தன் தந்தையை ஒரு சிறு தவறு செய்தவர் எனக் காட்டினால் காதலிக்கிறேன் எனச் சொல்கிறார் ஹீரோயின். சந்தானம் அதைச் செய்தாரா,  ஹீரோயினுடன் சேர்ந்தாரா என்பதே கதை.

மிக சுவாரஸ்யமான ஒன்லைன் தான் என்றாலும், படம் தொடங்கிய அடுத்த நிமிடமே கதையை மறந்துவிட்டார்கள். இது வெறும் காமெடி படம். எனவே லாஜிக் தேவையில்லை. அதற்காக கதையும் தேவையில்லை என்றால் கஷ்டம் ப்ரோ. ஆனாலும் இயக்குனரின் திறமை வெளிப்பட்ட இடம் படத்தை வெறும் ஒரு மணிநேரம் 40 நிமிடங்களாக குறைத்தது. சந்தானம் உள்பட பல ஹீரோக்களின் காமெடி படங்கள் சமீப காலங்களில் காமெடியை தரமுடியாமல் திணறிவரும் நேரத்தில், A1 பல இடங்களில் உண்மையிலேயே சிரிக்கவைக்கிறது. அப்படியான சின்னச்சின்ன மொமென்ட்களே படத்தை காப்பாற்றுகிறது. முக்கியமாக எம்.எஸ்.பாஸ்கர், சேசு, 'கோலமாவு கோகிலா' டோனி போன்ற நடிகர்கள் அவரவர் சீன்களில் அபார நடிப்பையும், நல்ல நகைச்சுவையையும் தருகிறார்கள்.

குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். "மாலை நேரத்து மல்லிப்பூ" அவருக்கே உரிய இசை முயற்சி. சில ஆண்டுகளுக்கு முன்னரே தெலுங்கில் அவர் போட்ட பாடல்தான் என்றாலும் இதில் கேட்ட உடனே பிடித்து விடுகிறது. "சிட்டுக்கு சிட்டுக்கு" பாடலும் ரசிக்கவைக்கிறது. ஆனால் இவற்றைவிட படத்தின் பல காட்சிகளுக்கான பின்னணி இசையாக சிறுசிறு கானா பாடல்களை பயன்படுத்திய விதம் அட்டகாசம். ஒரு கமர்ஷியல் காமெடி படத்திற்கு எதற்கு 'சநா' என்றால், அதற்கான நியாயத்தை அவர் படத்தில் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்தப் படத்தை லொள்ளுசபா ஸ்பூப் செய்தால் அது மீண்டும் இந்தப் படம் போலவேதான் இருக்கும்.