Cinema

“கர்ப்பகிரஹத்துக்குள்ள பிராமனாள மட்டும்தானே அனுப்பமுடியும்...” : ‘கொளஞ்சி’ பேசும் சாதி அரசியல்!

‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குநர் நவீன் தயாரித்துள்ள படம் ‘கொளஞ்சி’. தனராம் சரவணன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தன் விருப்பம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்கவேண்டும் என விரும்பும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும், அதன் விளைவுகளும் தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொளஞ்சி’ படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்ய, அத்தயப்பன் சிவா படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படம் பல மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் ஆகியோருக்கிடையேயான மோதலால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில், பா.ஜ.க-வின் அரசியல் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டிருப்பது யூ-ட்யூபில் வெளியாகியிருக்கும் காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது. சாதி அரசியலை அப்பட்டமாகப் பேசும் வசனங்களின் மூலம் ‘கொளஞ்சி’ கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.