
உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான், இரண்டாவது கட்டமாக மற்றொரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், ஜனவரி 27-ம் தேதி முதல் கிட்டத்தட்ட 16,000 கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடந்த சில மாதங்களுக்குள் அமேசான் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய ஆட்குறைப்பு நிகழ்வாக இது இருக்கும். இந்த நடவடிக்கை தற்போது உலகளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் இந்த ஆட்குறைப்புகள், கடந்த 2025ம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டதைப் போன்றோ அல்லது அதே அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாத ஆட்குறைப்பு நடவடிக்கையின்போது அமேசான் நிறுவனம் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டால், இந்த இரண்டு கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நீக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 30,000 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது. இது அமேசான் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் குறைப்புகளில் ஒன்றாக அமையும்.

அமேசான் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பணியாட்களை பணியமர்த்தியிருந்தாலும், அதன் கார்ப்பரேட் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த புதிய ஆட்குறைப்புகள், அமேசான் தனது செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கும், உள்நாட்டில் நிறுவனம் செயல்படும் விதத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் என நிறுவன உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்டோபரில், அமேசான் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கிமயமாக்கலால் ஏற்பட்ட மாற்றங்களுடன் இதனை தொடர்புபடுத்தி விளக்கம் கொடுத்திருந்தது.
இருப்பினும், அமேசானின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி இதுகுறித்து பேசும்போது, “இந்த ஆட்குறைப்புகள் செலவுகளைச் சேமிப்பது அல்லது செயற்கை நுண்ணறிவு வேலைகளை மாற்றுவது பற்றியது அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
இந்த விளக்கம் ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே விவாதத்தைத் எழுப்பியது. குறிப்பாக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக விரைவாக பணியாளர்களை நியமித்த பிறகு தங்கள் கட்டமைப்புகளை மறுமதிப்பீடு செய்து வரும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளதால் இது விவாதப்பொருளாக மாறியது.
இதுவரை, அமேசான் இந்த சமீபத்திய ஆட்குறைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்து தெரிவிக்கவில்லை. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரை தொடர்புகொள்ள முயன்றபோதும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களும் முதலீட்டாளர்களும் அச்சத்தில் உள்ளனர். புதிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரமே தொடங்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத் துறையின் மந்தமான வளர்ச்சி, செயல்திறனை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களின் அழுத்தம் மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆண்டுகளில் காணப்பட்ட வீழ்ச்சி போன்றவற்றுடன் போராடி வரும் நேரத்தில் இந்த ஆட்குறைப்பு செய்தி வந்துள்ளது.
அமேசானைப் பொறுத்தவரை, இந்த ஆட்குறைப்புகளின் அளவும் வேகமும் மறுசீரமைப்பு நடைபெற்று வருவதையே காட்டுவதாக கூறப்படுகிறது.
அமேசான் ஊழியர்கள் இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டாலும் கூட, வரும் வாரங்களிலேயே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள், ஊழியர்களை மன ரீதியாகவும், வாழ்க்கை முறை ரீதியாகவும் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகளவில் மாறிவரும் தொழில்நுட்ப மாற்றத்தை காரணமாக வைத்து இந்த நடவடிக்கைகளில் இதுபோன்ற பெருநிறுவனங்கள் இறங்குகின்றனவா அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாப நோக்கில் இதுமாதிரி முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்கின்றனவா என்ற கேள்வி இயல்பாகவே பணியாளர்களுக்குள் எழுந்துள்ளது.






