சென்னை - லண்டன் - சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், போயிங் 787-8 விமானத்தை தினசரி சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் லண்டன் பயணிகள் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும். அதன் பின்பு சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. அதன் பின்பு அந்த விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசரமாக தரை இறங்கியது.
இதை அடுத்து இன்று சென்னைக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக, விமானங்களின் இயந்திரங்கள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று முறை சரிபார்க்கப்படுகிறது. விமான இயந்திரங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் இருந்தாலும், அதை முழுமையாக சரி செய்த பின்பே, விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் தான் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அல்லது ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் உயிர் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.