இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியனின் பதவியேற்பு விழாவுக்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெக்ரான் சென்றிருந்தபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என ஈரான் தலைவர் எச்சரித்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என ஈரான் அமைச்சர் கூறியுள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சவூதி அரேபியாவில் கூடியது. அதில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பக்யூரி அலி பாகேரி கனி, "ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு இரான் கொடுக்கப் போகும் பதிலடியை ஓஐசி அமைப்பு ஆதரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இரானின் நடவடிக்கை அதன் சொந்த இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அரண் மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அரணாக இருக்கும்"என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் ஈரானின் ராணுவ நடவடிக்கைக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.