உலகம்

“கலைஞர் பேசியது திருக்குறளை பற்றியே, திருக்குறளுக்கு உரை எழுத இதுவே காரணம்” - பூச்சி S.முருகன் புகழாரம்!

“கலைஞர் பேசியது திருக்குறளை பற்றியே, திருக்குறளுக்கு உரை எழுத இதுவே காரணம்” - பூச்சி S.முருகன் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழர் திருநாள், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு லண்டன் SOAS பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கழக தலைமை நிலையச் செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி S.முருகன் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார் .

இதைத் தொடர்ந்து உரையாற்றிய பூச்சி முருகன் பேசியது பின்வருமாறு : “என் மூச்சினில் கலந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடக்கும் வேளையில் இங்கிலாந்து நாட்டில் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். திருவள்ளுவரையும் கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும்.

தமிழினத்தின் அடையாளமாய் திகழ்கிறது திருக்குறள். அந்த திருக்குறளின் குரலாய் திகழ்ந்தார் கலைஞர். 80 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தோடு பயணித்த கலைஞர் பெரும்பாலும் பேசியதும் எழுதியதும் திருக்குறளை பற்றியே, வாழ்ந்ததும் திருக்குறளின் அடிப்படையிலேயே.

திருக்குறளுக்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்பு, அவரது 14 வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. 1948ல் திருக்குறள் மாநாட்டை முன்னின்று நடத்திய பெரியார், அதே மாநாட்டில் தாளமுத்து நடராஜனின் சிலையை பட்டுக்கோட்டை அழகிரியைக் கொண்டு திறக்க வைத்தார். அந்நிகழ்ச்சிதான் திருக்குறள் மீது கலைஞருக்கு தனிப்பிரியம் உருவாக காரணமாகியது.

“கலைஞர் பேசியது திருக்குறளை பற்றியே, திருக்குறளுக்கு உரை எழுத இதுவே காரணம்” - பூச்சி S.முருகன் புகழாரம்!

1953ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்தவர் அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு வள்ளுவரைப் பற்றி பாடம் நடத்தியதோடு அங்கு திருக்குறள் மன்றம் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். 1963ம் ஆண்டு சட்டமன்றத்தில் வள்ளுவரின் படத்தை வைக்க வேண்டுமென்று குரல் கொடுததன் விளைவாக 1964ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் தமிழக சட்டசபையில் வள்ளுவரின் படத்தை திறந்து வைக்கிறார்.

1966ல் கலைஞரின் முயற்சியால் மயிலாப்பூரில் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் சிலையொன்றை திறந்து வைத்தார். பின்னர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியமைந்தபோது பொதுப்பணித்துறையோடு சேர்த்து போக்குவரத்து துறையையும் கவனித்துக் கொண்டிருந்த இவரது காலத்தில் தனியார் பேருந்துகள் அனைத்தும் அரசுமயமாக்கப் படுகிறது. அதோடு அனைத்துப் பேருந்துகளிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்தார்.

பின்னர், 1956ல் தன்னுடைய முரசொலி வார இதழில் முதல் முறையாக குறளோவியம் எழுதினார். அவர் தொடர்ந்து எழுதிய 354 திருக்குறள்களில் கலைஞரின் முதல் உரை அன்றுதான் எழுதப்பட்டது. அடுத்து வந்த பல ஆண்டுகளாக குறளோவியம் தீட்டிய கலைஞர், அந்த குறளோவியத்தை வடிவமைக்க சென்னையில் ஒரு வள்ளுவர் கோட்டத்தையும் அமைத்தார்.

வள்ளுவர் கோட்டத்தை திட்டமிட்டவர், கலைஞர். திருவாரூர் தேரை நினைவூட்டும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டிய நாள் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார். வள்ளுவர் கோட்டத்தை கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தும் நாளை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.

“கலைஞர் பேசியது திருக்குறளை பற்றியே, திருக்குறளுக்கு உரை எழுத இதுவே காரணம்” - பூச்சி S.முருகன் புகழாரம்!

முரசொலியில் தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டாமல், குறளோவியம் தீட்டப்பட்டது என்று பெருமையோடு வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவை உடன்பிறப்புகளுடன் பகிர்ந்து கொண்டார். பாசத்தோடு வளர்த்த மகளின் திருமணத்தை பார்த்து மகிழ நினைத்த நேரத்தில் மணப்பந்தலுக்குள் நுழைய முடியாமல் வெளியே நிற்க வேண்டிய சூழலில் இருப்பதாக உருக்கமாக எழுதியிருந்தார்.

வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட பின்பும் தினமும் அவ்வழியேதான் முரசொலி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆனால், ஒரு நாளும் வள்ளுவர் கோட்டத்திற்குள் சென்றதில்லை. 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வள்ளுவர் கோட்டத்தில் அடியெடுத்து வைத்தார்.

அய்யன் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர், 1970ம் ஆண்டு முதல் தைத்திங்கள் இரண்டாம் நாள் ‘‘திருவள்ளுவர் திருநாள்” எனவும், அதனை விடுமுறை நாளாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு தைத் திங்கள் இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

மூன்று கடல்கள் சந்திக்கும் இடமான குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைக்கவேண்டும் என்பது கலைஞரின் நீண்டகால கனவு. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர்தான் அது சாத்தியமானது.

“கலைஞர் பேசியது திருக்குறளை பற்றியே, திருக்குறளுக்கு உரை எழுத இதுவே காரணம்” - பூச்சி S.முருகன் புகழாரம்!

குமரிமுனையில் வள்ளுவர் சிலையை அடிக்கல் நாட்டியது, கலைஞர்தான். கையில் உளியெடுத்து அவரே செதுக்கி தொடங்கிவைத்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 2000ம் ஆண்டின் முதல் நாளில் குமரி முனையில் வள்ளுவர் சிலை கலைஞரின் கைகளால் திறந்து வைக்கப்பட்டது. வள்ளுவர் சிலையை பற்றி கலைஞர் குறிப்பிடும்போது அலையும் வலையும் அசையலாம். நாம் கட்டியுள்ள சிலை அசையாது என்றார். சுனாமி பேரலையின்போதும் வள்ளுவர் சிலை அசையாமல் நின்றது.

திருக்குறளின் சிறப்பினை மாணவ செல்வங்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்யும் மாணவர்களை பாராட்டி குறள் பரிசு தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது ரூ.10,000 குறள் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் சட்டசபையில் முதல்வர் கலைஞரிடம் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை சார்ந்த அனந்தநாயகி திமுக ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து, திருக்குறள்களை எழுதியுள்ளீர்கள் அதில் நான் படித்த ஒரு குறள், 'யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு', என்று இருந்தது.

இது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கா அல்லது நடத்துனருக்கா அல்லது பயணிகளுக்கா?", என்றுக் கிண்டலாகக் கேட்க, கலைஞர் உடனடியாக எழுந்து, "அம்மையார் அனந்த நாயகி அவர்கள், 'யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு', என்ற திருக்குறள் யாருக்குப் பொருந்தும் என நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறார். நாக்கு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் அக்குறள் பொருந்தும்", என்று பதில் கூறுகிறார்.

கலைஞரையும் திருவள்ளுவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories